Sunday, June 17, 2012

ஒரு பதவியும் சில போட்டிகளும்!

ந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக நம்ம சம்பத்து புதுசா பதவியேத்து, முதல் அறிவிப்பா குடியரசு தலைவர் தேர்தல் அறிவிச்சதிலிருந்து இந்தியாவே அல்லோலகல்லோல பட்டுக்கிடக்கு. யாரு மனசுல யாருன்னு!

இந்திய அரசியல் அமைப்புப்படி குடியரசு தலைவர் தான் இந்தியாவை ஆள்றாரு. அவருக்கு வசதியா மாநிலங்களை ஆள்வதற்காக ஆளுநர்களை நியமிக்கிறாரு. ஒரே ஆள் எல்லாத்தையும் பார்த்துக்கிட முடியாதுல்ல? அதனால் அவருக்கு ஒத்தாசையா இருக்கிறதுக்காக ஒரு மந்திரிசபை அமைக்கப்படுது. அதாவது ஒவ்வொரு தொகுதி மக்களும் அவங்களுக்கு பிடிச்ச எம்.பிக்களை தேர்ந்தெடுத்து, அவங்களில் பெரும்பாலானவங்க சேர்ந்து மந்திரிசபையை தேர்ந்தெடுக்கிறாங்க. அந்த மந்திரிசபையின் தலைவரை பிரதமரா அறிவிக்கணும்.இந்த மந்திரிசபை நாட்டு நடப்பை மேற்பார்வையிட்டு குடியரசு தலைவருக்கு உரிய தகவலகளை கொடுப்பாங்க. அது அடிப்படையில் குடியரசு தலைவர் முடிவுகளை எடுப்பார்.மந்திரிசபை சொல்றதை அப்படியே அவர் கேக்கணும்னு இல்லை. ஏற்கனவே மந்திரிசபை சொன்ன பரிந்துரைகளை ரிஜெக்ட் பண்ணி திருப்பி அனுப்பிச்ச குடியரசு தலைவர்கள் நிறைய இருக்காங்க. இதே மாதிரி தான் மாநிலங்களிலும். எம்.பிக்களுக்கு பதில் எம்.எல் ஏக்கள். மந்திரி சபை, பிரதமர், முதல்வர் எல்லாம் இல்லாம கூட இருந்திரலாம். ஆனால் குடியரசு தலைவர் / ஆளுநர் இல்லாம ஒரு நிமிஷம் கூட அரசு இயங்கமுடியாது. இது தான் அரசியல் அமைப்பு சொல்ற சிஸ்டம்.

ஆனா, நடைமுறையில் எல்லாமே மாறிப்போச்சு.

சகல அதிகாரங்களும் இப்போ மந்திரிசபைகிட்டேயும், பிரதமர்/முதல்வர் கிட்டேயும் இருக்குது. குடியரசு தலைவர் / ஆளுநர் எல்லாமே டம்மியாகிட்டாங்க. மந்திரிசபை சொல்றதை கேட்டு தான் ஆகணும்னு ஆகிப்போச்சு. தினசரி, மந்திரிசபை குடியரசு தலைவர் / ஆளுநரை சந்திச்சு அன்னன்னைக்கு விஷயங்களை அப்டேட் (பிரீஃபிங்) செய்யுற வழக்கம் தேய்ஞ்சு போச்சு. இப்போதைக்கு அவங்க ஜஸ்ட் இருக்காங்க அவ்வளவு தான்.

குடியரசு தலைவர் பதவிக்கு பெரும்பாலும் பொதுவான நபர்கள், மேதைகள், தலைசிறந்த மனிதர்கள் மாதிரியான ஆட்களை தான் நியமிப்பாங்க. அதுவும் எல்லா கட்சிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒருமனதா தான் நியமனம் இருக்கும். 1969ல் நிலைமை மாறிச்சு. அப்போ குடியரசு தலைவர் பதவிக்கு நீலம் சஞ்சீவ ரெட்டியை காங்கிரஸ் நியமிச்சது. ஆனா அவர் இந்திரா காந்திக்கு ஆகாத ஆள்ன்றதால, இந்திரா காந்தி தனியா வி.வி.கிரியை போட்டியா நிறுத்தினார். அந்த போட்டியில் வி.வி.கிரி ஜெயிச்சு குடியரசு தலைவர் ஆனார்.

அங்கிட்டிருந்து, குடியரசு தலைவர் பதவின்றது அரசியல் சார்ந்ததா ஆகிப்போச்சு. யாருக்கு அதிக ஓட்டு இருக்கோ அவங்க சொல்ற ஆள் தான் குடியரசு தலைவர்ன்னு ஆகிப்போச்சு.

இதில ஓட்டுன்னு சொல்றது ஒரு மெகா கணக்கு!

குடியரசு தலைவர், இந்தியாவை பொறுத்தவரைக்கும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை! மறைமுக தேர்தல் தான். அதாவது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்காங்க இல்லே.. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்னு அவிங்க தான் ஓட்டுப்போட்டு குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பாங்க. நாடளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற / சட்டமேலவை உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து ஓட்டு போட்டு தான் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுறார். 50% ஓட்டுக்கு மேல வாங்குறவிங்க தான் குடியரசு தலைவரா வர முடியும். அதுபடி பார்த்தா.. எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்காங்களோ அவங்க சொல்றவங்க தான் குடியரசு தலைவர். அதுக்காக எதிர்கட்சிக்காரங்க மனசு ஒடஞ்சு போயிரக்கூடாதுல்ல..அதனால் துணை குடியரசு தலைவர் பெரும்பாலும் அவங்களுக்கு. இது தான் டீலு!

சரி, இப்போ இருக்கிற நிலைமையில் எந்த கட்சிக்கு / கூட்டணிக்கு அதிக உறுப்பினர்கள் ஓட்டு இருக்குன்னு இப்போ தெளிவா தெரிஞ்சிருக்குமே, அப்புறம் எதுக்கு நிறைய பேரு போட்டி போடுறாங்கன்னு தான் இன்னும் பலருக்கும் விளங்கலை.

நாம இப்போதைய நிலைமைக்கு வருவோம்!

காங்கிரஸ் தனது வேட்பாளரா பிரணாப் முகர்ஜியை அறிவிச்சிருக்காங்க. மம்தா பானர்ஜி, அப்துல் கலாமை அறிவிச்சிருக்காங்க. அதிமுக சங்மாவை முன் நிறுத்துது. கருணாநிதி ஹமீது அன்சாரியை முன்பு பரிந்துரை செஞ்சு, அது நடக்காம போனதும், இப்போ காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கிறதா சொல்லிட்டாரு. இதுக்கிடையில் சோம்னாத் சட்டர்ஜியும் தேர்தலில் நிக்கப்போறதா சொல்லி இருக்காரு. இத்தனை பேரு என்ன தைரியத்தில் போட்டி போடுறாங்க? அவங்களுக்கு உண்மையிலேயே 50% ஓட்டு கிடைக்குமா? வெற்றி வாய்ப்பு இருக்கா? இந்த கேள்விக்கெல்லாம் ஒரே பதில், பிரணாப் தவிர வேறே யாருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லைன்றது தான்!

பிரணாபை வேட்பாளரை அறிவிச்சப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது! காரணம், பொதுவாவே, குடியரசு தலைவர் பதவிக்கு விவரம் தெரிஞ்சவிங்க யாரையும் நியமிக்கமாட்டாங்க. உலகிலேயே அதிக அதிகாரமுடைய பதவி இந்திய குடியரசு தலைவர் பதவி தான். அதாவது அமெரிக்க ஜனாதிபதியின் முடிவுகளுக்கு செனட்டின் ஒப்புதல் வேணும். இந்திய ஜனாதிபதிக்கு அந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் எதுவும் கிடையாது. எந்த நிமிஷத்தில் வேணும்னாலும் அவர் தன்னை தானே சர்வாதிகாரியாக்கிக்க முடியும். அவரது நடவடிக்கைகளை தடுக்கவோ, அவரை நீக்கவோ முடியாது. அவர் தப்பான ஆளாவே இருந்தாலும், அவரை நீக்கிறதுக்கு நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. உச்சநீதிமன்றத்தில் வழக்கு, நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட்னு நிறைய நடைமுறைகள் இருக்கு. அதுக்கு முன்னால் அரசியல் சட்ட அமலாக்கத்தை குடியரசு தலைவர் முடக்கி உத்தரவிட்டுட்டார்னா..அதுவும் கிடையாது. அதனால் எப்படி பார்த்தாலும், இந்திய ஜனாதிபதி மாதிரி சர்வ வல்லமை படைத்த பதவி வேறே இருக்கிறதா தெரியலை. இதெல்லாம் மனசில் வெச்சு தான், அதிகம் விவரம் தெரியாத, பணிஞ்சு குனிஞ்சு சொன்னபேச்சு கேக்கிற மாதிரியான ஆட்களை மட்டுமே அந்த பதவிக்கு நியமிச்சிட்டு இருந்தாங்க. டி.என்.சேஷன், ப.சிதம்பரம் பேரெல்லாம் ரிஜெக்ட் பண்ணினதுக்கு இதுவும் ஒரு காரணம்.

இந்த ஆங்கிள்ல பிரணாப் தேர்வை பார்த்தீங்கன்னா, உங்களுக்கும் 1000 வோல்ட் ஷாக் அடிச்சிருக்கும் இந்நேரம். காரணம் அவர் நிர்வாகத்தில புலி. பொருளாதாரம், இந்திய நிர்வாகம், அரசியல், வரலாறு, நிதி துறை, வெளியுறவுன்னு எல்லாத்திலேயும் ரொம்ப விவரம் உள்ள ஆளு. சிம்பிளா ஒரு உதாரணம் சொல்றேன். இதுவரைக்கும் ஜனாதிபதியா இருந்தவங்க எல்லாரும், வெளிநாட்டு உடன்படிக்கை கையெழுத்து போடும்போது, அதிகாரிகள் தான் எல்லா முடிவும் எடுப்பாங்க. அவங்க என்ன தர்றாங்களோ, அதில் அப்படியே கையெழுத்து போட்டுட்டு வர்றது தான் வழக்கம். ஆனா பிரணாப் அப்படியில்லை, ஒவ்வொரு முடிவையும் எதிர்கால நிகழ்வுகள் என்ன ஆகும், இதன் விளைவுகள் என்ன, சாதக பாதகம் என்னென்னன்னு யோசிச்சு முடிவெடுக்கும் திறன் உள்ளவர். ரொம்ப போல்டானவர். யாருக்கும் தலை குனிஞ்சு நிக்காதவர். இப்படியான ஒருவர் இனி வெளிநாட்டு உடன்படிக்கைகள் கையெழுத்திடும்போதும், இந்தியாவிலேயே முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் எப்படி செயல்படுவார்ன்னு உங்களாலேயே யூகிக்க முடியும். இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளையும், இந்தியா பற்றிய உலக நாடுகளின் மனப்பான்மையையும் கூட அடியோட மாற்றக்கூடும். நல்லவிதமா தான்! ஆனா, காங்கிரசுக்கு இதெல்லம் தெரிஞ்சும் எந்த தைரியத்தில் இப்படி ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சு பார்த்தும் ஒண்ணும் விளங்கலை! சுருக்கமா சொன்னா, இந்தியாவுக்கும், இந்திய நிர்வாகம், வெளியுறவு, மக்கள் எல்லாத்துக்கும் பிரணாப் ஜனாதிபதியா வர்றது ரொம்ப நல்ல விளைவுகளை தரும். நல்ல விஷயம் தான். ஆனா, என் ஆச்சரியம், காங்கிரஸ் எடுத்திருக்கும் அளப்பரிய ரிஸ்க் தான். பார்ப்போம் பின்னாடி என்ன நடக்குதுன்னு!

இதுக்கிடையில், நிறைய விமரிசனங்கள். தமிழின தலைவர்ன்னு சொல்லிக்கிற திமுக தலைவர் கலைஞர் கூட அப்துல் கலாமை ஆதரிக்கலையேன்னு தினமலர் பத்திரிக்கை ஒரு கேள்வி எழுப்பி இருக்கு. (அவங்க விழுந்து விழுந்து ஆதரிக்கிற அதிமுக தலைவி ஜெயலலிதா கூட தான் கலாமை ஆதரிக்கலை..ஏன்னு ஒரு வரி.. ஒரே ஒரு வரி எழுத சொல்லுங்க பார்ப்போம்! விடுங்க!) கலாம், சிறந்த விஞ்ஞானி, ஆசிரியர். ஆனா அரசு நிர்வாகம், தீர்க்கதரிசனமான தெளிவான முடிவுகள் எடுப்பது மாதிரியான விஷயங்கள் வரும்போது அவரது கடந்த முறை செயல்பாடு அவ்வளவு திருப்தியா இல்லைன்னு எல்லாருக்குமே தெரியும். மேலும், இந்தியா இப்போ இருக்கிற பொருளாதார நெருக்கடி, வெளியுறவு பிரச்சனையில் அது தொடர்பா விஷயம் தெரிஞ்ச ஒருத்தர் தலைமை பதவியில் இருந்தா பல வகையான வசதிகள் இருக்கு!

சங்மாவை கிளப்பிவிட்ட ஜெயலலிதா பின்னர் சைலண்ட் ஆயிட்டாங்க. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சங்மாவை தன் கட்சியை விட்டே நீக்கிருவேன்னு சொல்லியும், தொடர்ந்து போட்டியில் இருப்பேன்னு அவர் சொல்றாரு. அவரது நம்பிக்கைக்கு காரணம் இருக்கு. பாஜக தன்னை ஆதரிச்சால், காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளும் ஆதரிச்சு ஜனாதிபதியாகிட ஒரு வாய்ப்பு இருக்குன்னு எதிர்பார்க்கிறார். அதில் தப்பு இருக்கிறதா தெரியலை.

கட்ட கடைசியில் பரிதாபமா தெரியுறது, நம்ம அப்துல் கலாம் அவர்கள் மட்டும் தான். மம்தா மட்டும் தான் ஒரே ஆறுதல் அவருக்கு,.

இந்திய மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு பொதுவான நபரான கலாம், இதுக்கு மேலேயும் அமைதியா இருக்கிறது எனக்கு சரியா படலை. அவராவே விலகி தன் மீதான மரியாதையை அதிகப்படுத்திக்கணும்னு நான் நினைக்கிறேன்!

இன்னும் ஒரு வாரம் இருக்கு, முடிவுகள் தெரிய. போட்டியின்றி குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் மானம் மரியாதை காப்பாற்றப்படணும்ன்ற என் நம்பிக்கை காப்பாற்றப்படுமான்னு தான் காத்திருக்கிறேன்.

1 comment:

  1. சிறந்த அலசல்.. :))

    ReplyDelete

Printfriendly