Monday, July 16, 2012

மூன்றாம் உலக போர் - வைரமுத்து நூல் வெளியீட்டு விழா


போன வாரம் என் வீடு தேடி வந்த வைரமுத்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கிடைத்தவுடனே தீர்மானித்துவிட்டேன் என்ன ஆனாலும் ஜூலை 13 மாலை விழாவில் கலந்துகொள்வது என்று. கடைசியாக பெய்யென பெய்யும் மழை நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றது. அதன் பின் இப்போது தான்.

எனக்கும் வைரமுத்து அவர்களுக்குமான உறவு பற்றிய சிறு பதிவு ஏற்கனவே வைரமுத்துவும் நானும் என  எழுதியிருப்பது உங்களுக்கு தெரியும். அதனால் அதை பற்றி விரிவாக செல்லாமல் நாம் நேராக விழாவுக்கு சென்றுவிடுவோம்.

சென்னையில் இன்றைய தேதிக்கு இருக்கிற ஒரே பெரிய சிறந்த விழா அரங்கம், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் அருகிலுள்ள காமராஜர் அரங்கம் மட்டும் தான். அங்கே தான் விழா. இத்தனை பெரிய நகரத்தில் இன்னும் சில அரங்கங்கள் அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, புதிய அரங்கம் கட்டப்படும் என  கடந்த ஆட்சியில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டதோடு சரி. வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
விழா மாலை 6 மணிக்கு. நான் 5 மணிக்கெல்லாம் விழா அரங்கத்தில் அமர்ந்துகொண்டேன். கொஞ்சம் வசதியான பகுதியாக பார்த்து, மேடை முழுமையாக தெரியும் வகையில் அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற விழாவில் ஒரு பெரிய சங்கடம், தொலைகாட்சி காரர்கள். மேடைக்கு எதிரே இவர்களும் மேடை போட்டு ஒரு பத்துபேர் படம் எடுப்பதற்காக நின்றுகொண்டு எல்லாரையும் சங்கடப்படுத்துவார்கள். அதனால் பக்கவாட்டான பகுதியில் அமர்ந்துகொண்டது, விழாவை முழுமையாக ரசிக்க உதவியது.


அரங்கம் நிரம்பிவழிந்தது. பலரும் நின்றுகொண்டிருந்தனர். அது தவிர அரங்கத்துக்கு வெளியே ஒரு பெருங்கூட்டமே செவி வழியாக விழாவை கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த நூல் புதிதாக நூல்வடிவத்தில் வெளியிடப்படுகிறது என்றாலும் சமீப காலம் வரையும் ஆனந்தவிகடன் இதழில் தொடராக வந்து அனைவராலும் படிக்கப்பட்ட நூல் தான். ஏற்கனவே படித்து முடித்த ஒரு நூலுக்கான வெளியீட்டு விழா என்றபோதும் இத்தனை ஆரவாரமான கூட்டம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. வந்திருக்கும் கூட்டம், என் கணிப்புப்படி, ஐவகையினர். 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் சார்ந்த இயக்கத்தினர் மற்றும் அவரது இலக்கிய பேச்சை கேட்க வந்தவர்கள் முதல் வகையினர். இதுபோன்ற விழாக்களில் பெரும்பாலும் அவர் அரசியல் பேசுவதில்லை. முழுக்க முழுக்க தமிழ் மணக்கும் இலக்கிய உரையாக அது அமையும். அப்படி பேசக்கூடியவர்கள் என இன்று மிக சிலர் தான் இருக்கிறார்கள். இரண்டாவது வகையினர், கலைஞானி கமலஹாசன் அவர்களது ரசிகர்கள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்துவிடவேண்டும் என்கிற துடிப்பில் வந்தவர்கள். 

மூன்றாவது வகையினர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது வாசகர்கள். ஜெயகாந்தன் பெயர் சொல்லப்பட்டபோதெல்லாம் எழுந்த பலத்த ஆரவாரம் பிரமிப்பை தந்தது. எழுதுவதை நிறுத்தி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் அவர் மீதான ஈர்ப்பு, எல்லோருக்குமே சற்றும் குறையாமல் இருக்கிறது. மக்களின் மனதில் புகழ் மரியாதையுடன் இருப்பதற்காக கலைஞர், கமல், வைரமுத்து என பலரும் தினம் தினம் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டிய சூழலில், எல்லாவற்றையும் நிறுத்திவிட்டபின்னும் மக்களின் மன சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துகொண்டிருப்பவர் ஜெயகாந்தன் என்பது மற்றுமொருமுறை நிரூபணம் ஆனது. அதற்கு காரணம் எவர்க்கும் பணியாத அவரது நேர்மையான வாய்மை என்றே நான் கருதுகிறேன். நாலாவது வகையினர் வைரமுத்துவுக்காக வந்து குவிந்தவர்கள். ஐந்தாவது வகையினர் தான் மிக மிக சொற்பமானவர்கள். இந்த நூலுக்காக வந்தவர்கள்.


16 முறை, வைரமுத்துவின் நூலை வெளியிட்டவர் கலைஞர் என்பது ஒரு மிகப்பெரிய பெருமை. ஒரு எழுத்தாளனின் நூலை ஒரு தலைவன் தொடர்ச்சியாக வெளியிட்டிருப்பது இது தான் இத்தனை பெரிய நிகழ்வாக இருக்கக்கூடும்.

சரியாக 6 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக, இந்த நூல் வெளியாவதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கான மரியாதை செய்யல். கலைஞர் அவர்களது கரங்களால் அவர்களுக்கு சிறப்புகள் செய்யப்பட்டன. ஓவியர், வரைகலை நிபுணர், வெளியீட்டாளர், விளம்பரம் செய்தவர் என  இந்த் நூலுக்கு துணையாக இருந்த ஒவ்வொருவரும் முறையாக கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர் ஒரு குறும்படம் திரையிடப்பட்டது. இந்த நூல் புவி வெப்பமயமாதல் உலகு எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் அழிந்துவரும் விவசாயம் நீர் மேலாண்மை ஆகியன குறித்து பேசுகிறது. எனவே அது தொடர்பான ஒரு குறும்படம். உலகின் பல பகுதிகள் இந்த புவி வெப்பமயமாதலால் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன, அதன் விளைவுகள் என்னென்ன, இனி உலகு எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அதை நாம் எப்படி தவிர்க்கலாம் என்பதை பற்றி மிக சிறப்பாக அந்த குறும்படம் சொல்லியது. மிக சிறப்பான காட்சி தேர்வு, மற்றும் இயக்கம். அதிலும் பின்னணி இசை மகத்தானது. குறும்படம் முடிந்தும் சில நொடிகள் வரை நிச்சலனமாக இருந்தது அரங்கம். ஒவ்வொருவருக்கும் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பயங்கரம் லேசாக உறைக்க தொடங்கியிருக்கவேண்டும்.

இந்த நூல், ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியானதை படித்த வாசகர்கள் 10 பேர், இந்த நூல் தொடர்பான தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். விஜய் டிவியின் கோபிநாத், ஒரு பள்ளி மாணவி, ஒரு பரத நாட்டிய கலைஞர், ஒரு பேராசிரியர் ஆகியோரும் அதில் அடக்கம். அவரவர் பார்வையில் இந்த நூல் எப்படி இருந்தது என்பதான வாசகர் விமரிசனமாக அது அந்த மேடையில் அரங்கேறியது. அதற்குபின், நூல் வெளியிடப்பட்டது.

முதல் வாழ்த்துரையாக கமலஹாசன் அவர்கள் பேசினார். அவர் பேச வந்ததை எல்லாம் அந்த 10 பேரும் பேசிவிட்டார்கள் என்கிற வருத்தத்தை தெரிவித்துவிட்டு, பொதுவாக பேசிவிட்டு அமர்ந்தார். குறிப்பிடத்தக்க விஷயங்கள் என எதுவும் இல்லை.

பின்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பேசினார். எதற்கும் பணியாத அவரது நேர்மையான விமர்சனம் இங்கேயும் கூர்மையாக தெறித்தது. உலகம் அபாயத்தில் இருக்கிறது, அழிந்துவிடும் என்பதெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருவது தான். ஆனால் இந்த உலகம் அழியாது. இயற்கைக்கு தன்னை சமநிலைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே இதெல்லாம் அனாவசிய பயம். வியாபாரத்துக்கு வேண்டுமானால் பயன்படும் என்பது போல நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பேசிவிட்டு அமர்ந்தார். அந்த கம்பீரம், அந்த துணிச்சல், அந்த நேர்மை என்னை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அவரது கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுவதை உணர்ந்தேன். மிக சரியான விமர்சனம் அது தான். சிங்கங்கள் எப்போதும் சிங்கங்களாகவே வாழ்ந்து வரும் என்பதை நிரூபித்தார் ஜெயகாந்தன்.

சற்று நேர சலசலப்புக்கு பின், கலைஞர் உரையாற்றினார். விழாப்பேருரை என்று அது சொல்லப்பட்டு இருக்கவேண்டும். அவ்வளவு விரிவாக அந்த நூலை பற்றி பேசினார். 89 வயதில், தமிழகத்தின் மக்களுக்கு இந்த ஆட்சியாளர்களால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் உபாதைகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு முழுநேர அரசியல் தலைவருக்கு, இப்படி நூல் படிக்கும் அவகாசம் எங்கேயிருந்து வந்தது என வியக்காத நாளில்லை. நேர மேலாண்மையை அவரிடம் கற்றுக்கொள்லவேண்டும். அரசியல், கட்சி நிர்வாகம், மக்களுக்கான போராட்டம், தமிழக மக்களுக்காக மத்திய அரசுடன் நாள்தோறும் நடத்திவரும் ஆலோசனைகள், தேசிய நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு தலைவர்களுடனான தொடர்புகள், நாள் தோறும் தமிழகத்திலிருந்து வெளியாகும் அத்தனை பத்திரிகைகளும் படித்து அவற்றுக்கெல்லாம் உரிய பதில்கள் அனுப்புவது என இந்த வயதிலும் ஓய்வின்றி சுழலும் அவருக்கு, நூல் படிப்பதற்கும், அதை நினைவில் வைத்து பேசுவதற்கும் கூட நேரம் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான். ஜெயகாந்தன் அவர்களது விமர்சனத்தை பற்றி எதுவும் சொல்லாமல், நேரடியாக முழுமையாக் நூல் குறித்த விமர்சனத்தை மட்டும் சிறப்பாக சொல்லி முடித்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கவந்த வைரமுத்து, உணர்ச்சி பிழம்பாக வெடித்தார். அவரால் ஜெயகாந்தனின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது பேச்சில் பட்டவர்த்தனமாக தெறித்தது. மனதை பக்குவப்படுத்தி பொதுவிழாக்களில் எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை வைரமுத்து அவர்கள் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்வது நல்லது. ஜெயகாந்தனின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, உலகம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றிய விரிவான தகவல்களை தெளிவாக எடுத்துரைத்தார். இயற்கையை நாம் எப்படி எல்லாம் அழித்திருக்கிறோம், அதன் விளைவுகள், விவசாயம் என்பதை பற்றியெல்லாம் மிக மிக விரிவாக பேசிய அவரது பேச்சு ஒவ்வொருவரும் அவசியம் அறிய வேண்டிய ஒன்று. மானுட சமூகத்துக்கான அவரது அந்த பேச்சையே ஒரு சிறு நூலாக வெளியிட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து!
இயற்கையை கொண்டு சுகவாழ்வு வாழவேண்டிய மனிதன், இயற்கையை கொன்று சுக வாழ்வு வாழ்கிறான்; பிறந்ததில் இருந்து இறப்பு வரையும் மனிதனுக்கு எல்லாமே மரம் தான் மரம் தான் மரம் தான், அதை ஏனோ அவன் மறந்தான் மறந்தான் மறந்தான்; விவசாயிகள் மெல்ல மெல்ல விவசாயத்தை மறந்து நகரவாழ்வில் தஞ்சம் அடையும் நிலைக்கு நம் பொருளாதார கொள்கைகள் உள்ளது. விவசாயம் மெல்ல மெல்ல கார்பரேட் நிறுவனங்கள் கைக்கு சென்றுவிட்டு, பெட்ரோலை போலவே தக்காளிக்கும் அவர்கள் விலை நிர்ணயம் செய்யும் நாள் தொலைவிலில்லை; விவசாயத்தை காப்பாற்றுவதற்கான ஒரு இயக்கத்தை தோற்றுவித்து எல்லாருக்கும் உதவுவேன்; அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதை காப்பாற்றும் உணர்வையும் ஊட்டாமல் இந்த உலகை காப்பாற்ற முடியாது; போன்ற வைர வரிகளும் எண்ணற்ற கருத்துக்களுமாக கனல் தெறித்தது அவரது உரை வீச்சு.


இந்த நூலை படித்து சிலருக்காவது, இந்த உலகின் மீது அக்கறை வந்தாலே அது வைரமுத்துவின் வெற்றி தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. விழா முடிந்தபின், நூல் வாங்கியவர்களுக்கு நூலில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ஒரு மணிநேரம் நடந்தது.

என்னைப்பொறுத்தவரை, இதுவரை நடந்த நிகழ்வுகள் அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும், மிக முக்கியமான ஒரு விழாவாக இது அமைந்தது. கலைஞரின் உரையிலும் கமலஹாசனின் உரையிலும் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இல்லை என்பது ஒரு பெரும் ஏமாற்றம்.

அடுத்த விழாவுக்கான காத்திருத்தல் தொடங்கியது!

1 comment:

  1. arumai, naanum vizhavukku vanthiruthen. kalaingar naam ethi paartha mathiri pesavillai ennra varuththam irunthahtu

    ReplyDelete

Printfriendly