Wednesday, July 17, 2013

நானும் கடவுளும்!

டவுள் குறித்த எனது கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது சொல்லிவந்தாலும், அது குறித்த விரிவான கட்டுரை எழுதுவேன் என்றெல்லாம் இன்றுவரை நான் எண்ணியதில்லை. எனினும் அப்படியான ஒரு சூழல் வந்து சேர்ந்ததை எந்த கணக்கில் வைப்பது?

எல்லா குழந்தைகளையும் போல எனக்கும் இறை நம்பிக்கை ஊட்டப்பட்டபடி தான் வாழ்க்கை தொடங்கியது. எனது அப்பா, முன்னாள் தீவிரமான திமுக காரர். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் வெளியேறி அதிமுகவில் கடைசி வரை இருந்து வந்தவர். அதனால் அவர் எனக்கு பகுத்தறிவு சிந்தனைகளையும், பக்தி மார்க்கத்தையும் சரிவிகிதத்தில் சொல்லி தந்திருந்தார்.

சிறுவயதில் இருந்தே எனது இஷ்ட தெய்வம் முருகன் தான். எப்போதுமே கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்வது முருகனிடம் தான். தமிழகத்திலுள்ள ஆறு படைவீடுகளுக்கும் சென்று தரிசித்திருக்கிறேன். என் அப்பா, எல்லா வருஷமும் ராணி முத்து காலண்டர் வாங்குவதே அந்த முருகனின் அழகுக்கு தான். எனினும் எல்லா தெய்வங்களிடமும் எனக்கு பிரியம் இருக்கிறது. இஸ்லாமிய, கிருத்தவ நண்பர்கள் அறிமுகத்தால் அவர்களது வழிபாட்டு தலங்களுக்கும் நிறைய சென்றிருக்கிறேன். வருடத்துக்கொருமுறையேனும் வேளாங்கண்ணி சென்று வருவது ஒரு வழக்கம். சென்னையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெசண்ட் நகர் சர்ச்சிலோ, லஸ் சர்ச்சிலோ நான் இருப்பேன். தெய்வங்களில் நான் பாகுபாடு பார்ப்பது கிடையாது. தெய்வம் தெய்வம் தான். தெய்வம் இருக்கிறதா எனக்கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், தெய்வசெயல்கள் பலவற்றை நான் நிறைய என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்.

கடவுள் விஷயத்தில் நான் ஒரு வகையில் கலைஞர் கட்சி. கடவுளை மறுக்கவில்லை. ஆனால் இது தான் கடவுள், இப்படி தான் வழிபடவேண்டும், இவர்களுக்கு மட்டும் தான் உரிமை, இன்னின்ன சடங்குகள் செய்யவேண்டும் போன்ற ஆதிக்கதன்மையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். பக்தி என்பது வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. எந்த கடவுளும், எந்த விதமான சாங்கியத்தையும் செய்ய சொல்லியதாக வரலாறில்லை. நாமாக ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட வழக்கங்கள் தான் அவை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

பத்தாம் வகுப்பில் ஒரு செய்யுள் வரும்.

“அல்லா என்பார் சிலபேர்கள்; அரன் அரி என்பார் சிலபேர்கள்

வல்லான் அவன்பர மண்டலத்தே வாழும் தெய்வம் என்பார்கள்

சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள்

எல்லாம் இப்படி பலபேசும் ஏதோ ஒரு பொருள் இருக்கின்றதே”

இந்த செய்யுள் தான் எனது நிலைப்பாட்டை ஓரளவுக்கு விளக்கக்கூடியது என நினைக்கிறேன்.

தூய பக்தி, அன்பு, உள்ளார்ந்த வேண்டுதல், பிரார்த்தனை ஆகியவை மிக அற்புதங்களை நிகழ்த்தி காட்டியதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதனால் கடவுள் இல்லை என ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால், அது தொடர்பான மூட பழக்க வழக்கங்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, கட்டுப்பாடுகளை, ஆதிக்க அடக்குமுறைகளை, வருணாசிரம வேறுபாடுகளை, வேதம் சொன்னதாக சொல்லி சொல்லி செய்யப்படும் புனை கற்பனை கதைகளை நான் ஏற்பதில்லை. புராணங்களை கூட அதன் கதை சொல்லும் திறனுக்காக தான் வாசித்தேன். ஆனால் அதை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

ராமாயணத்தை நம்பவேண்டும் என்றால், பேசும் கழுகு, பறக்கும் புஷ்பகவிமானம், தாவும் குரங்கு கூட்டம், மாய மான் என பலவற்றை நான் நம்பவேண்டி இருக்கும். அது இயலாத காரியம். கலைஞர் அவர்கள் 1970களில் காரைக்குடி கம்பன் கழகத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ராமாயண சொற்பொழிவு நடத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் கம்பனின் தமிழை வியந்தோதினார். இந்த ஒப்பீட்டுக்காக அனைத்து வடிவ, அனைத்து மொழி ராமாயணங்களையும் முழுமையாக கற்றவர். இன்றைய தேதியில் எல்லா வித ராமாயணத்தையும் அறிந்த ஒருவர் அவராக தான் இருக்க முடியும். புராணத்தை புராணம் என படிப்பதோடு சரி. அதை நம்பி செயல்படுவதில்லை. அதே கொள்கை தான் கிட்டத்தட்ட எனக்கும்.

என் அப்பா சொல்வார். “வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களின் தகவல்களினால் பிரித்தாளப்பட்டாலும், கிருஷ்ணர், இயேசு, நபிகள் நாயகம் ஆகியோரின் வாழ்க்கையில் பல ஒற்றுமை இருக்க காணலாம். மூவருமே ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. அதை ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு விதமாக சொல்லியிருக்கவும் வாய்ப்புண்டு” என்பார். மூவரின் வரலாறையும் படித்த பின், ஓரளவுக்கு அவர் சொன்னது சரியாக இருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். மூவரையும் ஒரு மன்னர் கொல்ல துரத்துகிறார், மூவரது சொற்பொழிவின் சாராம்சமும் ஒன்றே, மூவருக்கும் சீடர்கள், ஒருவர் மாட்டு தொழுவத்திலும், ஒருவர் ஆட்டிடையிலும், ஒருவர் ஒட்டக பட்டியிலும் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எல்லாம் ஒருமாதிரி கிட்டத்தட்ட ஒத்து வருவது போல நானே கற்பனை செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரை சிலர் காங்கிரஸ் காரர் என்றும், சிலர் திமுக காரர் என்றும், சிலர் அதிமுக காரர் என்றும் வெவ்வேறு கால கட்டத்தை ஆதாரம் காட்டி சொல்வதில்லையா? அது போல என நானே நினைத்துக்கொள்வேன்.

கர்த்தர் தன்னை கடவுள் என சொல்லிக்கொள்வதில்லை. ஜெஹோவா தான் கடவுள், அவர் உருவமற்றவர், நான் அவரது தூதன் மட்டுமே என்கிறார். இதையே தான் நபிகள் நாயகம் (சல்) சொல்கிறார். இறைவன் உருவமற்றவன். நான் இறையோதும் திருத்தூதன் என்கிறார். நாமும் கூட, சக்தி ஜோதிவடிவானவள், உருவமற்றவள் என்கிறோம். இன்னும் சொல்லப்போனால், உருவமற்ற கடவுளின் குறியீடாக மூன்று மதத்தவர்களுமே மூன்றாம் பிறையை தான் வைத்திருக்கிறார்கள் என்பது. எனவே எனக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நான் நிறைய பயணிப்பேன். அப்படியான பயணங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயங்கள் நிறைய. அதில் குறிப்பிடத்தக்கது, கோவிலுக்குள் அனுமதியில்லாத தெய்வங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழக ஊரகப்பகுதிகளில் தான் நான் தெய்வங்களிலும் ஜாதி பிரித்து கோவிலுக்கு உள்ளிருக்கக்கூடிய சாமி, வெளியிலிருக்கக்கூடிய சாமி என பாகுபாடு காட்டப்படுவதை கண்டிருக்கிறேன். மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகன் போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும் வெவ்வேறானவை என்பது எனக்கு உண்மையில் ஆச்சரியம் தான் கொடுத்தது.

தெய்வங்களிலோ, பக்தர்களிலோ பாகுபாடு பார்ப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கலைஞர் ஒருமுறை சொன்னார், “கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் கடவுள் இருப்பதாக நம்பி வழிபடுவோரின் உரிமையை நான் பாதுகாக்கவேண்டும்”. அந்த வகையில் கோவில்களில் எல்லாம் ஒரு வேளையாவது பூஜை நடைபெற வேண்டும், முறையாக குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்றெல்லாம் ஆணையிட்டு, தமிழகத்தில் முதல்முறையாக இந்து சமய அறநிலைய துறை என தனியாக ஒரு துறையையும் ஏற்படுத்தி அனைத்து ஆலையங்களுக்கும் பாதுகாப்பு தந்தார். அதை அவரது தனிப்பட்ட கருத்தோடு இணைத்து பார்த்து வம்பளக்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பார்த்தால், அவரது அணுகுமுறையின் நாகரீகம் விளங்கும். “நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன். ஆனால் அதை இம்மக்கள் மீது திணிக்க மாட்டேன். மாறாக அவர்களது விருப்பம் வழிபாடு என்றால் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பேன்” என்கிற கலைஞரின் அந்த அணுகுமுறை எனக்கும் உடன்பாடான ஒன்றே. அப்படியான எண்ணத்திலிருந்த எனக்கு, சிலர் கோவிலுக்குள் செல்லக்கூடாதெனவும், சில இனத்து தெய்வங்களுக்கு கோவிலுக்கு வெளியே தான் இடம் எனவும் சொல்லப்பட்ட விஷயங்கள் ஆச்சரியத்தோடு சேர்த்து வெறுப்பையும் தந்தது.

வாதாபி கோட்டையில் மதிற்சுவரில் காவல் தெய்வமாக இருத்தப்பட்ட கணபதியை (எண்+கண+நாதன்=எட்டு திசை காவலன்; கண+பதி=திசைகளின் காவலன்) தளபதி பரஞ்சோதி பெயர்த்தெடுத்து தமிழகத்துக்குகொண்டுவந்து, பிள்ளையார்பட்டியில் வைத்து, பின்னர் கதைகள் மூலம் சிவன் குடும்பத்தில் சேர்ப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் காவல் தெய்வமாக யாழி (குதிரை உடல், யானை துதிக்கை) இருந்து வந்தது. பின்னர் சிற்சில கதைகள் கட்டப்பட்டு கணபதியை நாம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், இப்போதும் பெரும்பாலானோர் வீட்டு மதிற்சுவரிலும், ஊர் எல்லையிலும் மட்டுமே வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அப்படி கணபதிக்கு சில கதைகள் கட்டப்பட்டு வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதை போல, மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி வகையறாக்களுக்கும் ஏதேனும் கதைகள் கட்டி கோவிலுக்குள் அனுமதித்தால் நன்றாக இருந்திருக்குமே என நான் பலமுறை நினைத்ததுண்டு.

மக்களில் சிலரே கோவிலுக்குள் நுழைய முடியாது என்கிற நிலையில், அவர்களை ஆலைய பிரவேசம் செய்த மரியாதைக்குரிய பெரியாரின் மண்ணிலிருந்துகொண்டு, மனிதரிலும், கடவுளரிலும் வேற்றுமை விதைக்கவும் சிலரால் முடிந்திருக்கிறது என்பதே ஒரு ஆச்சரியம் தான். இன்றைக்கு கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதை போராட்டமாக முன்னெடுத்து செல்லப்படுவதாக செய்திகள் படித்தேன். ஆலைய பிரவேசமோ, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதோ இறைவன் முன்னால் அனைவரும் சமம் என காட்டுவதற்கே அன்றி, வேறு பிடிவாதம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனாலும், கலைஞர் அவர்களே பல்லாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தும் கூட, ஆலையங்களில் பக்தர்களிடம் கட்டண அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டை களைவதற்கு எந்த சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

கேரள கோவில்களில் ஒரே வரிசை தான். கடவுளை தொழ வந்தவர் ‘யாராகிலும்’ அவர்கள் பக்தர்கள் என்கிற ஒரே வரையறையில் வைத்தே பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய மனநிலையும், பண்பாடும் தமிழகத்தில் வர வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை. தமிழக மக்களின் மனநிலையை மிக பண்பட்டதாக, முற்போக்காக மாற்றியதில் பெரும் பங்கு வகித்த கலைஞர் கூட இது விஷயத்தில் தோற்றுப்போனதாகவே கருதுகிறேன்.

என்னை பொறுத்தவரை, எந்த கோவிலென்றாலும் செல்வேன், மனம் உருகி பிரார்த்திப்பேன், என் சங்கடங்கள், வேண்டுதல்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருவேன். அவ்வளவு தான் எனக்கும் கடவுளுக்குமான உறவு. அதற்கான பரிகாரம், பூஜை, மந்திரம், மாந்திரீகம், ஸ்தோத்திரம், மண்சோறு, அலகு, மொட்டை இத்யாதி இத்யாதி போன்றவற்றை நான் அங்கீகரிப்பதில்லை. அதை ஆமோதிப்பதுமில்லை. முதலில் சொன்னது பக்தி. பின்னர் சொன்னது மூட நம்பிக்கை. இதையெல்லாம் செய்தால் தான் அது நடக்கும் என்றால் அதன் பெயர் வியாபாரம். நீ இதை செய்யாததால் உனக்கு கஷ்டம் என்றால் அது சிறுபிள்ளை தனம். கடவுளை இப்படியெல்லாம் நிர்பந்தங்கள் கொடுப்பவர் என வரையறுப்பதே கடவுளை இழிவுபடுத்தும் செயல் என கருதுகிறேன். இறைவன் அன்பு வடிவானவர். இறைவன் யாரையும் பாதுகாப்பதுமில்லை, யாரையும் அழிப்பதுமில்லை, யாரையும் துன்புறுத்துவதுமில்லை. ஆனால், நமது உள்ள குமுறல்களை அழுது தீர்க்க, யாரிடமும் சொல்ல முடியாதவற்றை கேட்டுக்கொண்டிருக்க, மொத்த மன பாரத்தையும் இறக்கி வைக்க அங்காங்கே வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்கள் அமர்ந்திருக்கிறார். என்னை பொறுத்தவரை கடவுள் அவ்வளவு தான்.

இறைவன் அதிசயங்களை செய்வார் எனில் அவனது வாசலில் அனுதினமும் யாசித்துக்கொண்டிருக்கும் யாசகர்களுக்கு என்றோ நல்லவழி காட்டி இருப்பார். எனவே அப்படியான அதிசய சக்தியாக எல்லாம் என்னால் அவரை காண முடியவில்லை. எதிர்த்து பேசாத, எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு தோழனை போலவும், எங்கிருந்தோ எனது நியாயமான ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுபவனாகவும், எனது துயரங்களை மெல்லமெல்ல துடைத்தெறியும் வலிமையை தருபவனாகவும் நானறியாமல் எனக்குள்ளே இயங்கிக்கொண்டிருப்பதாக மட்டுமே உணர்கிறேன்.

உன் ஆசைகளை கட. உனக்கு உள்ளே இருப்பான் இறைவன் என்கிற கட+உள் விளக்கத்தை விட, உன் ஆசைகளை அதிகரித்துக்கொண்டே இரு.. அதை அடையும் வழியை அவன் காட்டுவான் என்கிற தத்துவம் தான் எனக்கு இன்று வரை பயனளித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றை அடைந்ததற்கு நான் மட்டுமே காரணம் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை.

Printfriendly