Saturday, December 27, 2014

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில்


டந்த 19.12.2014 அன்று மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், இந்திய அரசியல் சாசனத்தை 122 ஆம் முறையாக திருத்துவதற்கான வேண்டுகோளை சமர்ப்பித்தார். இதன் படி இந்தியாவில் வரும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜி.எஸ்.டி என்னும் ஒருமுக வரிவிதிப்பு முறை அமல்ப்படுத்தப்படுகிறது. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் புதிதாக 246A மற்றும் 279A ஆகிய புதிய சரத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன.
இது புதிய திட்டம் அல்ல. கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட 115 ஆம் அரசியல் சாசன திருத்தம் ஏற்கனவே ஜி.எஸ்.டி அமல்ப்படுத்துவதற்கான வழிமுறைகளை அனுமதித்து விட்டது. அப்போது பலமாக எதிர்த்து அந்த சட்டத்தை அப்போது முடக்கி போட்டவர்கள் இப்போது அதை அமல்ப்படுத்த சிறு திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவ்வளவு தான். அந்த அரசியலுக்குள் போகாமல் நாம் ஜி.எஸ்.டி என்றால் என்ன? அது எந்த வகையில் எல்லாம் உபயோகம், எந்த வகையில் எல்லாம் உபத்திரவம் என்பதை பற்றி மட்டும் விவாதிக்கலாம்..

இந்தியாவில் இப்போதைய வரி விதிப்பு முறையில் ஜி.எஸ்.டி தரும் மாற்றம் :.

இந்தியாவில் இப்போதைக்கு மாநிலத்துக்குள் நடக்கும் வியாபாரங்களுக்கு வாட் வரியும் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வியாபாரங்களுக்கு சி.எஸ்.டி வரியும், உற்பத்தி பொருட்களுக்கு எக்ஸைஸ் வரியும், இறக்குமதி பொருட்களுக்கு கஸ்டம்ஸ் வரியும், சேவைகளுக்கான சர்வீஸ் வரியும், இது தவிர என்ட்ரி டாக்ஸ், ஆக்டிராய், என்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், என பல பல வரிகள் உள்ளது. மாநிலங்களும் மத்திய அரசும் தனித்தனியாக விற்பனைக்கு தகுந்த படி வரி விதிக்கின்றன. அதாவது வாட் வரி, ஆக்டிராய், என்ட்ரி டாக்ஸ், எண்டேர்டெயின்மேண்ட் டாக்ஸ் போன்றவை மாநிலங்களும், எக்ஸைஸ், கஸ்டம்ஸ், சர்வீஸ், சி.எஸ்.டி போன்றவை மத்திய அரசும் விதிக்கின்றன..

இதில் மாநிலங்கள் விதிக்கும் மாநில வாட் வரியை மொத்தமாக மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம். மத்திய அரசு விதிக்கும் சி.எஸ்.டியில் மாநிலங்களுக்கான பங்கு தொகை மட்டும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒரு வியாபாரத்துக்கு ஒரே ஒரு விற்பனை வரி தான் விதிக்கப்படுகிறது. அதில் வாட் வரியை மட்டும் வியாபாரிகள் கழித்துக்கொண்டு பாக்கியை அரசுக்கு கட்டினால் போதும்..

இப்போது அறிமுகப்படுத்தப்படும் ஜி.எஸ்.டி படி இனி, மாநிலத்துக்குள்ளான விற்பனைக்கு இரு அரசுகளும் ஒரே சமயத்தில் வரி விதிக்கும் (SGST & CGST). மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு மத்திய அரசு மட்டும் IGST விதிக்கும். இந்த IGST வரி விதிப்புமுறை மாநிலங்களுக்கு பெருந்த இழப்பு என்பதால் சில மாநிலங்கள் அதனை எதிர்க்கின்றன. எதிர்ப்பு கண்ட மத்திய அரசு, ஐந்து வருடங்களுக்கு இழப்பினை மாநிலங்களுக்கு திருப்பி தருவதாக சொல்லி இருக்கிறது. அதுவும் எப்படி? முதல் மூன்று ஆண்டுகளுக்கு 100% நான்காம் வருடம் 75% ஐந்தாம் வருடம் 50% மாநிலங்களுக்கு கிடைக்கும். ஆறாம் வருடம் முதல் அனைத்து வரியும் மத்திய அரசுக்கு மட்டுமே. மாநிலங்களுக்கு அதில் சல்லி காசு கிடையாது. அந்தந்த மாநிலங்கள் அந்தந்த வரி வருவாயை வைத்து அவர்களே நிர்வகித்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெளிவாக சொல்லி விட்டது..

ஜி.எஸ்.டி – சாதக பாதகங்கள்:.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. பல பல வரிகள் செலுத்துவதற்கு பதில் ஒரே வரி, ஒரே ரிட்டர்ன்ஸ் என்கிற முறை பெரிய சுமையிலிருந்து விடுதலை அளித்தது போல் இருக்கிறது வியாபாரிகளுக்கு. . இந்த ஜி.எஸ்.டி மூலம் மொத்தம் 17 வகையான வரிவிதிப்புகள் ரத்து செய்யப்பட்டு ஒரே வரியாக அமலாகிறது. நாடு முழுவதும் சீரான வரி என்பது மாநிலங்களுக்கிடையேயான ஏற்ற தாழ்வை குறைக்கும். பொருட்களுக்கான போட்டியினை சமன் படுத்தும். .

அதே சமயத்தில் பல பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. எனது பார்வையில் அவற்றுள் சில:.

1. நாடு முழுவதும் சீரான வரி விதிப்பு என்பது இந்தியாவுக்கு ஒத்து வராது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் வளர்ச்சி, சீதோஷண நிலை, விளைச்சல், பூகோள வாய்ப்புகள் அடிப்படையில் மாநிலங்கள் தங்கள் மாநில தொழில் துறையினரின் வளர்ச்சிக்காக சில வரி சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இனி அது முடியாது. பஞ்சாபில் கோதுமைக்கும் தமிழகத்தில் அரிசிக்கும் கொடுக்கப்படும் முக்கியத்தும் இருக்காது. எல்லா பொருட்களுக்கும் எல்லா மாநிலத்திலும் ஒரே விதமான வரி விதிப்பு. இது பல வகைகளில் சிக்கலை ஏற்படுத்தும்.

2. பெட்ரோல் ஜி.எஸ்.டி வரியில் கொண்டுவரப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அதே சமயம் ஜி.எஸ்.டி தவிர சிறப்பு எக்ஸைஸ் வரி மத்திய அரசால் பெட்ரோலுக்கு விதிக்கப்படுவதால் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும்..

3. ஸ்டாம்ப் டியூட்டி (முத்திரைத்தாள்), மது போன்றவற்றுக்கான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே இருக்கும். மாநிலங்கள் அவர்களது விருப்பப்படி வரி விதித்து கொள்ளலாம். இது விலைகளில் ஏற்ற தாழ்வை கொண்டுவந்து நாடு முழுதுமான சீரான வரி என்னும் சித்தாந்தத்தையே சிதைத்து விடும். மது உற்பத்தி / விற்பனை உள்ள மாநிலங்களுக்கு அதிக வருவாயும் மது விலக்கு கொள்கை உள்ள மாநிலங்களுக்கு வரியின்மையும் ஏற்படுத்தும். எல்லா மாநிலங்களும் மதுவை ஊக்குவிக்கும் நிலைக்கு தள்ளப்படும்..

4. வரிவிதிப்பு முறையை அமல் செய்ய ஜி.எஸ்.டி கவுன்சில் என ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் மத்திய மாநில அமைச்சர்கள் உறுப்பினர்கள். இவர்களது ‘ஒருமித்த’ கருத்தின் அடிப்படையில் பொருட்களுக்கான வரி விதிப்பு முறை கொண்டுவரப்படும். இதில் பல வட மாநில பிரதிநிதிகள் சிண்டிகேட் அமைத்து சில குறிப்பிட்ட பொருட்களுக்கு லாபி செய்ய முடியும். உதாரணமாக சணல் (ஜூட்) தமிழகத்தில் அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் வட மாநிலங்களில் அது மிக பெரிய வியாபாரம். அதே போல ஸ்பைசஸ் கேரளா கர்நாடகாவில் முக்கியம் மற்ற மாநிலங்களுக்கு முக்கியமில்லை. எனவே எந்த விதத்தில் வரி விதிப்பு இருக்க போகிறது. அதில் என்னென்ன உள்ளடி அரசியல் விளையாடும். அவை எந்தெந்த வகையில் மாநில தொழில்துறை, விவசாயம், ஆகியவற்றை பாதிக்கும் என்பதை எல்லாம் கணிக்க முடியவில்லை. மேலும் மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசின் பிரதிநிதிகள் கவுன்சிலுக்கு அனுப்பப்படும் பொழுது அவர்களது மாறுபாடான கொள்கையும் பாதிக்கும். எல்லா வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதால், இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் முறை எந்த அளவுக்கு செயல்படும் என்பதே கேள்விக்குறியே. தமிழகம் போன்ற மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளில் ஏழு அமைச்சர் ஒரே துறைக்கு மாறி மாறி வருகையில் என்ன மாதிரியான கொள்கை முடிவு எடுக்க முடியும் என்பதும் புரியவில்லை..

5. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு ஜி.எஸ்.டி பொருந்துமா என்பதை மத்திய அரசு தெளிவு படுத்தவில்லை. இப்போதே ஆர்ட்டிக்கள் 370 கொடுக்கும் சிறப்பு சலுகை காரணமாக இந்திய சட்டங்கள் அங்கே செல்லாது. அவர்கள் விரும்பினால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஜி.எஸ்.டி அங்கே பொருந்தாது என்கிற நிலையில் நமது பொருட்களுக்கு அங்கெயும், அங்குள்ள பொருட்களுக்கு (குங்குமப்பூ, கம்பளி, மலர்கள்) இங்கேயும் வித்தியாசமான வரிவிதிப்பின் கீழ் வரும். ஜம்மு காஷ்மீரை நமது நாட்டின் ஒரு பகுதியாக ஒப்புக்கொள்வதில் காங்கிரஸை போலவே பாஜகவுக்கும் தயக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது..

6. மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தில் மாநிலங்கள் விரும்பினால் 1% கூடுதல் வரி விதிக்கலாம் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதுவும் சீரான வரிவிதிப்பை தகர்க்கும். அதோடு விலை ஏற்றமும் தவிர்க்க முடியாது..

7. ஜி.எஸ்.டி வரி என்பது சேருமிடம் சார்ந்த வரியாக கொண்டு வரப்படுகிறது. (இப்போது அமலில் இருப்பது உற்பத்தி இடம் சார்ந்த வரி). இதன் படி தமிழகம், கேரளம், மராட்டியம், வங்காளம், குஜராத், கர்நாடகம், ஆந்திரா போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்கள் பாதிக்கப்படும். அதாவது உதாரணமாக இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பிகாருக்கு விற்கப்படும் பொருளுக்கான வரி அக்ரூ ஆவது பீகாரில். எனவே பீகார் அரசுக்கு வரி வருவாய் அதிகம். ஆனால் உற்பத்தி செய்யும் நமக்கு வரி வருவாய் கிடைக்காது. இதன் பின் விளைவுகள் தொழில் துறைக்கான முக்கியத்துவம் குறையும், வேலையின்மை அதிகாரிக்கும். எல்லா மாநிலங்களும் வரி வருவாய்க்காக, உற்பத்தியை விட உபயோகத்தையே அதிகம் விரும்பக்கூடும். இது தொழில் வளர்ச்சியை பாதிக்கும்..

8. சேவை துறையினரும், உற்பத்தி துறையினரில் பல்வேறு மாநிலங்களில் வேர் ஹவுஸ் வைத்து வியாபாரம் செய்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். லாஜிஸ்டிக்ஸ் துறை பற்றிய தெளிவான திட்டமிடல் இந்த அரசிடம் இல்லை என்பது மிக அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது. முந்தய அரசு சப்ளை செயின், லாஜிஸ்டிக்ஸ், வேர் ஹவுசிங் போன்ற துறைகள் தான் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவில் முக்கியமான தொழிலாக இருக்கும் என தீர்க்கதரிசனமாக கணித்து அதற்கு தக்கவாறு கொள்கைகளை வெளியிட்டது. ஆனால் அப்படியான முன் யோசனை எதுவும் இந்த அரசிடம் காணப்படவில்லை..

9. அரசியல் சட்டம் விதி 366 (29A) படியான வரி விதிக்கும் பிரிவுகள் பற்றி இந்த அரசிடம் எந்த விளக்கமும் இல்லை. இப்போது சமர்ப்பிக்கப்பட திருத்தத்தில் கூட அதை பற்றி எந்த விளக்கமும் இல்லாமல் இருக்கிறது. ஆகவே ஹயர் பர்ச்சேஸ், வாடகை, லீஸ், போன்றவை குறித்த கொள்கைகள் என்னவென்றே இன்னமும் தெரியவில்லை. இந்தியாவின் மிக பெரிய வணிகமான ஹயர் பர்ச்சேஸ் பற்றி இந்த அரசு முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கிப்போட்டு விடும்..

தமிழகத்தின் பார்வை:.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி திருத்த சட்ட முன்வடிவை அது தாக்கல் செய்யப்பட மறுநாளே, அதாவது 20.12.2014 லேயே தமிழக அரசு மிக கடுமையாக எதிர்த்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் மிக முக்கியமானது. தொழில்வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான பங்காற்றுதல் ஆகியவற்றில் தமிழகம் எப்போதுமே முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போதைய திருத்தத்தின் படி, மாநில அரசுகளுக்கான பங்கு முடக்கப்படுவதும், உற்பத்தி மாநிலங்களை விட உபயோகிக்கும் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பது போல சட்டத்தை திருத்தி இருப்பதும் தமிழகம் போன்ற மாநிலங்களை வஞ்சிப்பது போலிருக்கிறது. மேலும் அவர் தனது கடிதத்தில் வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக எந்த விளக்கமும் இல்லை. எப்படி பட்ட கணக்கீடு பின்பற்ற படும் என சொல்லப்படவில்லை என்றெல்லாம் தெளிவாக சுட்டி காட்டி இருக்கிறார். அதாவது தமிழகம் பரந்துபட்ட தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியதற்கான தண்டனையாக இந்த சட்டம் வந்திருக்கிறது. நாம் உற்பத்தி செய்தும் நமக்கு வருவாய் இல்லை. ஆனால் நம்மிடம் வாங்கும் பயனாளி மாநிலங்களுக்கு வரி வருவாய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது..

இப்போதைக்கு மிக குழப்பமான சூழலில் தான் இருக்கிறது ஜி.எஸ்.டி அமலாவதற்கான பாதை. மத்திய அரசு தாக்கல் செய்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட பின்னால், பல பல விடை தெரியாத கேள்விகளுக்கு மத்திய அரசு விடைகளை தெளிவுபடுத்தியபின்னால், மாநிலங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்ட பின்னால், அவர்கள் எடுக்கும் ஒருமித்த கருத்தை அறிந்த பின்னால், எதிர் வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் மாநிலகட்சிகளின் கருத்துக்களையும் அறிந்த பின்னால், தொழில்துறையினரின் பயத்தை எல்லாம் போக்கிய பின்னால் தான் ஜி.எஸ்.டி நமக்கு சரியா இல்லையா என்பதையே சொல்ல முடியும்..

இப்போதைக்கு இது வெறும் அரசியல் கணக்குக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்த வரலாற்று பதிவுக்காக மட்டுமே அவசரம் அவசரமாக அள்ளி தெளித்திருக்கிறது மத்திய அரசு.


References:


1. Constitution Amendment 115 of 2011


2. Summary of Recent Amendment points


3. Constitution Amendment 122 of 2014



1 comment:

  1. GST யினால் ஏற்படும் சாதகங்களையும்,பாதகங்களையும் அருமையாக சொல்லியிருக்கீங்க.நன்றி.

    ReplyDelete

Printfriendly