Wednesday, April 29, 2015

ஜெ.வழக்கு – அலசலாம் வாங்க

ந்த திடீர் திருப்பம் திடீர் திருப்பம்ன்றாங்களே, அது கடந்த  ரெண்டு நாளில் நிறையவே நடந்திருக்கு, ஜெ. வழக்குல. அதை பத்தியெல்லாம் நிறைய கட்டுரைகள் மிக மிக விரிவா சட்ட அரசியல் வல்லுனர்கள் எழுதிட்டாலும், என் நண்பர்கள் சிலரின் கோரிக்கைக்காக என் பதிவையும் எழுதவேண்டி இருக்கு. இது கொஞ்சம் நீளமான பதிவு. அதனால் தயவு செஞ்சு சகிச்சுக்கோங்க.

இங்கே நான் சுருக்கமா(?) சொல்ல போறது நாலே நாலு விஷயங்கள் பத்தி தான். அதுவே நீண்டிருச்சு.

மிஸ்ரா தலைமையிலான மூணு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு – லைட்டா ஒரு அலசல். (Download Judgement copy here)

அன்பழகன் மனு – விவரம்

மம்மி ரிட்டர்ன் எதிர்பார்த்துட்டிருக்கும்போது ஆச்சார்யா ரிட்டர்ன் கொடுத்திருக்கும் சார்பிரைஸ் திருப்பங்கள் அதன் விளைவுகள் எதிர்பார்ப்புக்கள்

ஜெ.வழக்கு பத்தி எதுவுமே தெரியாம அவங்களை தியாகி ரேஞ்சுக்கும் அரசியல் பகடையால பாதிக்கப்பட்டவங்கண்ணும் நினைச்சிட்டிருக்கும் என் பாசத்துக்குரிய நண்பர்களுக்காக இந்த வழக்கு பற்றிய விவரம் – ரத்தின சுருக்கமா.

மிஸ்ரா தீர்ப்பு:

மிஸ்ரா தீர்ப்பு ஏற்கனவே எல்லாருக்கும் நாளிதழ் மூலமாவும் மீடியா மூலமாவும் தெரிஞ்சிருக்கும். அந்த 49 பக்க தீர்ப்பில் என்னை கவனிக்கவைத்த, குறிப்பிட்ட சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து இப்ப நாம கொஞ்சம் கேஷுவலா பேசலாம்.

குமாரசாமி நேர்மையான நீதிபதிங்கறதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனா அவர் விசாரணையின் கடைசி கட்டத்தில் கொஞ்சம் நெகிழ்ந்துட்டாருன்னு ஒரு உணர்வு இந்த வழக்கை கவனிச்சிட்டு வர்ற எல்லாருக்குமே தோணிருக்கும். அந்த தோணுதல் மிஸ்ராவுக்கும் இருந்துச்சோ என்னவோ, அவர் இரண்டாவது பத்தியிலேயே ஊழல் எந்த அளவுக்கு இந்தியாவையும் இந்திய மக்களையும் மறைமுகமா பாதிக்குதுன்னு, 1999 ஆம் வருஷம் இதே ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பை குறிப்பிட்டதோட, “Corruption corrodes the moral fabric of the society and corruption by public servants not only leads to corrosion of the moral fabric of the society but is also harmful to the national economy and national interest, as the persons occupying high posts in the Government by misusing their power due to corruption can cause considerable damage to the national economy, national interest and image of the country.என்கிற வரியை அடிக்கோடிட்டு காண்பிச்சிருக்காரு.

மேலும் மூணாவது பத்தியிலேயே ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்றார், (இத்தனைக்கும் இந்த பவானிசிங் வழக்குக்கு அது தேவையில்லாதது). அதாவது 2001 ஆம் வருஷம் நீதிபதி பரூச்சா ஜெயலலிதா முதல்வரா 14.05.2001 ல பதவி ஏத்தது செல்லாதுன்னு தீர்ப்பு சொல்லி 21.09.2001 முதல் பதவியை ரத்து செஞ்சாருல்ல அந்த தீர்ப்பு.

34 ஆம் பத்தியில் 2011 ஆம் வருஷம் மராட்டிய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஊழல் வழக்கை கையாளும் நீதிபதி எதை எல்லாம் கவனிக்கணும் எதை எல்லாம் புறக்கணிக்கணும்னு ஒரு வரையறை கொடுத்திருந்த தீர்ப்பை குறிப்பிட்டு காட்டுறார். 

35 ஆம் பத்தியில் சுப்பிரமணியம் சுவாமி & சிபிஐ தொடர்பான வழக்கில் 2014 ஆம் வருஷம் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையும் காட்டி இருக்கார். அதிலெல்லாம் ஊழல் வழக்கில் எந்த வித அச்சமும் இல்லாமல் நேர்மையாக துணிச்சலாக கடுமையான நடவடிக்கை எடுக்கணும், ஏன்னா அது நம்ம தேசத்தையே நாசம் செய்யக்கூடிய அளவுக்கு கெடுதலான விஷயம். யார் எந்த உயர் பதவியில் இருந்தாலும் செல்வாக்கு இருந்தாலும் பாரபட்சம் இல்லாம நடவடிக்கை எடுக்கணும்னு எல்லாம் சொல்லப்பட்டு இருக்கு. அதை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி அந்த பத்தியை எல்லாம் சுட்டி காட்டி இருக்கார்.

கடைசியா 36 ஆம் பத்தியில் நீதிபதி குமாரசாமி எப்படி எல்லாம்  இந்த வழக்கில் நடந்துக்கணும்னும் தெளிவா இன்ஸ்டிரக்ஷன்ஸ் கொடுத்து இருக்கார். எந்த சூழலிலும் உங்கள் பலவீனத்தை காட்டிக்கக்கூடாது, அது தான் உண்மையான சோதனைனு (பக்கம் 46) வேறே சொல்லி இருக்கார். அதனால் மிஸ்ராவுக்கும் குமாரசாமி விஷயத்தில் ஏதோ நெருடல் இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன். தைரியமா சட்டப்படி நடவடிக்கை எடுங்கன்னு மறைமுகமா சொல்லியிருக்கிறதா நான் நினைக்கிறேன்.

பவானி சிங் நியமனம் குறிச்சு தான் இந்த வழக்கே. என் பெரும் மதிப்பிற்குரிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் அவர்கள் தான் பவானி சிங்.தரப்பு வக்கீல். (ஒரே தொடர்புடைய வழக்குகளில் ஒரே வக்கீல் எப்படி ஜெ. தரப்புக்கும் பவானி சிங் தரப்புக்கும் ஆஜராகலாம்னெல்லாம் கேக்கப்படாது. அது டிசைன் அப்படித்தான்) அவர் பவானி சிங் நியமனம் செல்லும்னு சட்ட புத்தகத்தை எல்லாம்  வெச்சு வலுவா வாதாடினாரு. ஆனா மிஸ்ரா 23 ஆம் பத்தில சொல்றாரு, “குற்ற நடைமுறை சட்டம் கர்நாடகாவுல மட்டும் வேற. 1982 ஆம் வருஷம் கர்நாடக அரசு தனியா ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அந்த மாநிலத்தில் மட்டும் பப்ளிக் பிராசிக்கியூட்டரை நியமிக்கும் விதிகளை மாத்தி இருக்கு”னு குறிப்பிட்டிருக்கார்.

இந்த வழக்கு கர்நாடக ஜூரிஸ்டிக்ஷன்ல இருப்பதால் அந்த மாநில சட்டம் தான் பொருந்தும். அதன் படி பவானி சிங் நியமனம் சட்டவிரோதமானதுன்னு தெளிவுபடுத்தி இருக்கார் மிஸ்ரா. நாரிமன் எப்படி இந்த முக்கியமான பாயிண்டை கோட்டை விட்டாருன்னு தெரியலை.

இந்த தீர்ப்பில் அன்பழகன் & கர்நாடக அரசு தனித்தனியா ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் குமாரசாமிக்கிட்டே ஆஃபிடவிட் கொடுக்கணும்னும் அதை பரிசீலிச்சு அதுக்கு குமாரசாமி என்ன முடிவு எடுத்திருக்கார்ன்றதை தீர்ப்பில் குறிப்பிடணும்னும் சொல்லி இருக்கார். அதாவது, ஏற்கனவே நெகிழ்ந்து இருக்கும் குமாரசாமி, அன்பழகன் & கர்நாடக அரசிடம் இருந்து அஃபிடவிட்டை வாங்கி வெச்சிட்டு ஏற்கனவே முடிவு பண்ணின தீர்ப்பை வெளியிட்டிர கூடாதில்லையா? அதனால் தான் இந்த அஃபிடவிட் விவரங்களை தீர்ப்பில் வெளியிட சொல்லிருக்கார்னு நினைக்கிறேன். (பக்கம் 47).

எனக்கு இந்த தீர்ப்பில் ஒரே ஒரு நெருடல் தான். வழக்கு விசாரணை ஏற்கனவே முடிஞ்சு போச்சு. இரு தரப்பும் வாதம் பிரதி வாதம் எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. இப்ப போயி அன்பழகனையும் கர்நாடக அரசையும் மனு தாக்கல் செய்ய சொல்லிருக்கு உச்ச நீதிமன்றம். அது சரிதான். ஏன்னா பவானி சிங் முழுமையா ஜெ.வை எதிர்த்து வாதாடாம இருந்ததால், அதை இவங்க செய்யுறாங்க. ஆனால், நியாயமா இந்த இரண்டு மனுவின் நகலையும் ஜெ. தரப்புக்கு கொடுத்து அவங்க கருத்தையும் கேட்டிருக்கணும். அப்ப தான் ஜெ. தரப்பு விளக்கங்களும் கிடைக்கும், நீதிபதிக்கும் முடிவெடுக்க சவுகரியமா இருக்கும். ஆனா ஜெ. தரப்பு வாதம் வாங்கணும்னு எங்கேயும் உச்சநீதிமன்றம் சொல்லவே இல்லை. இது எனக்கு நியாயமா படலை. ஜெ. குற்றவாளி என்பதிலும், தண்டிக்கப்படவேண்டியவர் என்பதிலும் எவருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனா அது நியாயமான முறையில் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.

இப்போதைய சூழலில் அன்பழகனும் கர்நாடக அரசும் என்ன மனு கொடுத்தாலும் அதன் அடிப்படையில் தீர்ப்புன்றதை ஜீரணிக்க முடியலை. இருதரப்பு விளக்கமும் இருக்கணும்ங்கறது என்னுடைய கருத்து. ஆனா உச்ச நீதிமன்றம் இதுக்கும் ஒரு விளக்கத்தை தீர்ப்பில் சொல்லி இருக்கு. 32 & 33 ஆம் பத்திகளில் “ஏற்கனவே நீதிபதிகிட்டே எல்லா ஆவணங்களும் இருப்பதால், அதுவே போதுமானது. வாத பிரதிவாதங்களை விட அது தான் வலுவானது”னு சொல்லிருக்கார். அதாவது ஜெ. தரப்பில் ஏதாவது வருமானத்துக்கு ஆதாரம் இருந்திருந்தா இந்த 18 வருஷத்தில் கொடுத்திருப்பாங்கல்ல? அப்படி கொடுக்காத பட்சத்தில் கையில் இருக்கும் ஆவணங்களை வைத்து முடிவெடுத்துக்கலாம்னு படுது. சட்டப்படி இந்த நடைமுறை சரிதான். ஆனாலும் என் நெஞ்சில் ஏனோ அந்த நெருடல் இன்னும் போகலை.

இது மாதிரி இந்த தீர்ப்பில் இன்னும் நிறைய சுவாரசியம் இருக்கு.

******
அன்பழகன் மனு:

பேராசிரியர் அன்பழகன் 

ஏற்கனவே ஏப்ரல் 27 ஆம் தேதி அன்பழகன் 81 பக்கத்தில் தன்னுடைய வாதத்தை தாக்கல் பண்ணிட்டாரு. அதில் ஜெ. கொடுத்த பல விளக்கங்கள் எந்த அளவுக்கு பொய்யானதுன்னு விரிவா சொல்லி இருப்பதோடு அது சம்மந்தமான ஆதார ஆவணங்களையும் இணைச்சிருக்காரு. ஜெ. தரப்பு இந்த விளக்கங்களை சொன்னப்ப அது பொய்யின்னு வாதாடவேண்டிய பவானி சிங் அமைதியா இருந்ததால், இப்ப உச்ச நீதிமன்றம் அன்பழகனுக்கு அனுமதி கொடுத்து மனு தாக்கல் செய்ய சொல்லிச்சுன்றது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.

அந்த மனுவில், நமது எம்ஜிஆர் பத்திரிக்கை சந்தா எந்த அளவுக்கு மோசடியான விஷயம்னு விரிவா சொல்லி இருக்கார். அதே மாதிரி ஜெ.க்கு குறிப்பிட்ட காலத்தில் (1991-96) கணக்கில் வந்த வருமானம் எவ்வளவு, வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு, அந்த சொத்துக்களின் பட்டியல், 32 நிறுவனங்களின் 54 வங்கி கணக்குகளில் நடந்த பண பரிமாற்றம், பண பரிமாற்றம் தான் நடந்ததே தவிர அந்த நிறுவனங்களில் எந்த வருவாயும் (பிஸினஸ்) இல்லை என்பதற்கான ஆவணங்கள், வருமான வரி துறைக்கு 91 முதல் 96 வரை கணக்கு கொடுக்காததன் ஆவணங்கள்னு நிறைய தகவல்களை அள்ளி கொடுத்து இருக்கார். இதை தீர்ப்பில் குறிப்பிட்டே ஆகணும்னு உச்சநீதிமன்றம் வேற கண்டிஷனா சொல்லி இருக்கு. பார்ப்போம்.

******
ஆச்சார்யா ரிட்டர்ன்ஸ்:

பி.வி.ஆச்சார்யா

கர்நாடக அரசு ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் தங்கள் தரப்பு மனுவை தாக்கல் செய்யனுமே யார்ரா செய்யப்போறான்னு நினைச்சிட்டு இருக்கும்போது அதிரடி திருப்பமா ஆச்சார்யாவை நியமிச்சு அவரும் உடனே 18 பக்கத்தில் தன்னுடைய மனுவை தாக்கல் பண்ணிட்டாரு.

ஃபர்ஸ்ட் பால்ல சிக்சர் அடிக்கிற மாதிரி, வழக்கில் பிராசிகியூஷன் தரப்பான கர்நாடக அரசை ஒரு வாதியாக சேர்க்காமல் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டு இருக்கு. அதனால் இந்த அப்பீலே செல்லாது, தள்ளுபடி பண்ணுங்க யுவர் ஆனர்னு குண்டை தூக்கி போட்டு இருக்காரு. (நாரிமன் இதை கூடவா கவனிக்கலை?)

மேலும், இந்த வழக்கின் தொடக்கம், ஜெ செய்த ஊழல்கள் எல்லாத்தையும் சுருக்கமா சொல்லி இருக்கார். குன்ஹாவின் தீர்ப்பு சரின்றதில் கர்நாடக அரசு உறுதியா இருப்பதாகவும் அதற்கான காரணங்களையும் லைன் பை லைனா சுருக்கமா சொல்லி இருக்கார்.

இதே ஆச்சார்யா தான் முன்பு இந்த வழக்கை கையாண்டவர். அப்போ அவருக்கு பர்சனலா பல வகையிலும் மிரட்டலும் தொந்தரவும் நெருக்கடிகளும் கொடுத்து அவரே இந்த வழக்கு வேண்டாம்னு ராஜினாமா செஞ்சிட்டு போனார். (அவர் எப்படி எல்லாம் மிரட்ட்ப்பட்டார்னு அவரது சுயசரிதையான “All from Memory” யில் எழுதி இருக்கார்) இப்ப குடும்பம் எல்லாம் ஓரளவுக்கு பாதுகாப்பா செட்டில் ஆகி எதையும் சந்திக்க தைரியம் வந்த பிறகு மீண்டும் இதில் முழுமையா இறங்கி இருக்கார்னு நினைக்கிறேன். இது ஒரு திடீர் எதிர்பாராத திருப்பம். நான் வேறு யாராவது மூத்த வக்கீல் வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்.

ஆச்சார்யாவை முதன் முதலில் நியமிச்சதே வகேலா தான். இப்படி மீண்டும் எதுவும் நடந்திரக்கூடாதுன்னு தான் அவசரம் அவசரமா வகெலாவை ஓடிஷாவுக்கு இடமாற்றம் செஞ்சு மஞ்சுநாத்தை வெச்சு சாதகமான வக்கீலை அப்பாயிண்ட் பன்னிக்க நினைச்சாங்கனும், ஆனா எதிர்பார்த்ததை விட வேகமா மூவர் பெஞ்ச் தீர்ப்பு சொல்லிட்டாதால் இப்பவே வக்கீலை நியமிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சுன்னும், இப்பவும் வகெலாவே தான் தலைமை நீதிபதியா தொடர்வதால் அவர் மீண்டும் ஆச்சார்யாக்கிட்டே பேசி அவரை உடனடியா நியமிச்சிட்டார்னும் ஒரு பேச்சு சுத்துது. எல்லாம் நல்லதுக்கு தான். ஆச்சார்யா நியமனத்துக்கு கர்நாடக அரசும் உடனடியா ஒப்புதல் கொடுத்து வழக்கை விரைவு படுத்தி இருக்கு.

எனக்கு இதில் புரியாத விஷயம் என்னன்னா, அதெப்படி ஆச்சார்யா உடனே மனு ரெடி பண்ணினார்னு தான். அவர் இந்த வழக்கில் இருந்து வெளியேறிய பின் பவானிசிங் வைத்த வாதங்கள், அப்பீலில் நடந்த விவாதங்கள், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அதற்கான மறுப்புக்கள் எல்லாத்தையும் அவர் படிச்சு பார்க்க வேண்டாமா? ஒண்ணு, அவர் தான் இந்த வழக்கை நடத்தப்போறார்னு முன்பே க்ளூ கொடுத்து அவரை தயார்ப்படுத்தி இருக்கணும். அல்லது குன்ஹா தீர்ப்பையும் குமாரசாமி கொடுத்த தினசரி உத்தரவுகளையும் அடிப்படையா வெச்சு இந்த மனுவை தாக்கல் பண்ணி இருக்கணும். எது எப்படி இருந்தாலும், எந்த சம்மந்தமுமே இல்லாத நாமளே இந்த வழக்கை இந்த அளவுக்கு உன்னிப்பா கவனிச்சிட்டு வர்றப்ப, இந்த வழக்கை நடத்திய ஆச்சார்யா கவனிக்காமலா இருந்திருப்பாரு? அதனால் மனு தாக்கல் செய்யுறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை தான்.

******

ஜெ வழக்கு – சுருக்கம்:

நிறைய நண்பர்களுக்கு இந்த ஜெ. வழக்கு விவரமே தெரியாம, இது ஒரு அரசியல் வழக்கு, ஜெ. அப்பாவி, நிரபராதி, சதியால் தண்டனை அனுபவிப்பவர், சூழ்ச்சியில் சிக்கியவர்னுல்லாம் புலம்பிட்டு திரியும்போது சங்கடமா இருக்கு. படித்த பட்டதாரிகளே அப்படி பேசும்போது வருத்தமாவும் இருக்கு. ஜஸ்ட் ஒரு ரீ கேப்.. அவங்களுக்காக

1991-96 ஆம் வருஷம் ஜெ. முதல்வரா முதல் முறை பதவி ஏத்துக்கறார். அப்ப அவருடைய சொத்து மதிப்பு இவ்வளவுன்னு வருமான வரிக்கு சொல்றார். 97 ஆம் வருஷம் (முதல்வர் பதவிக்கு பின்) தன்னுடைய சொத்து மதிப்பு இவ்வளவுன்னு வருமான வரிக்கு சொல்றார். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் தான் இந்த 66 கோடி.

ஜெ. ஜெயலலிதா

முதல்வரா இருந்தப்ப எனக்கு சம்பளமே வேண்டாம்னு சொல்லி அடையாள சம்பளமா ரூ.1 மட்டும் மாதா மாதம் வாங்கிக்கிட்டார். அதாவது 5 வருஷத்தில் சம்பளம் மட்டும் ரூ.60. அது தவிர தோட்டம் சில முதலீடுகளில் இருந்து வந்த வருமானம் எல்லாம் சேர்த்தாலும் சில லட்சங்கள் தான் தேறிச்சு. ஆனா 66 கோடிக்கு எப்படி சொத்து சேர்ந்துதுன்றது தான் கேள்வி.

அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சிலருக்கு சாதகமா செயல்பட்டதால் அவர்கள் மூலமா கிடைச்ச லஞ்சப்பணம் என்பது தான் குற்றச்சாட்டு.

இந்த 18 வருஷத்தில் அந்த 66 கோடி எப்படி வந்துச்சுன்னு ஆவணங்களை வெச்சு இன்னை வரை ஜெ. தரப்பு நிரூபிக்கவே இல்லை. அந்த கணக்கீடு தப்பு, இந்த கணக்கீடு தப்பு, அந்த செலவு நான் பண்ணலையே, இந்த செலவு நான் பண்ணலைன்னு தான் சொல்றாங்களே தவிர, எந்த இடத்திலும் இந்த மொத்த வருமானம் எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லை. அதாவது மொத்த தொகையை குறைக்க தான் முயற்சி செய்தாங்களே தவிர முறைகேடான வருமானமே இல்லைன்னு அவங்க சொல்லலை. அப்படி இப்படின்னு ஒரு 13 கோடிக்கு கணக்கு காட்டி இருப்பதால், வழக்கின் தொகை 66 கோடியில் இருந்து 53 கோடி சொச்சத்துக்கு திருத்தி இருக்காங்க.  ஏற்கனவே உச்ச நீதிமன்றம் 1௦00 ரூபாய்ன்னாலும் 1000 ரூபா, முறைகேடா வந்தா தண்டனைதான்னு தீர்ப்பு சொன்னது ஞாபகம் இருக்கும்.

அப்படி ஜெ. தரப்பு குன்சா கணக்கு காட்டியதில் நமது எம்ஜிஆர் பத்திரிக்கைக்கான சந்தா தொகை 14 கோடின்றதும் ஒண்ணு. ஆனா கோர்ட் அதை ஏத்துக்கலை. 14 கோடி சந்தா தொகையில் பத்திரிக்கை அச்சடிச்சு அவர்களுக்கு அனுப்பும் செலவு எல்லாம் போக எத்தனை லாபம்? அந்த லாபத்தில் ஜெ.வின் பங்கு எத்தனை? அதை மட்டும் தான் கணக்கில் எடுக்கமுடியும்னு கோர்ட் சொல்லிச்சு. இப்படி கோர்ட் லாஜிக்கா பேசுறதை ஜெ. விரும்பலை. அதை எதிர்த்து வாதாடியும், முறையான ஆவணங்கள் இல்லாததால் கோர்ட் அதை நிராகரிச்சிருச்சு.

(இதில் கொடுமை என்னான்னா நமது எம்.ஜி.ஆர் சந்தா திட்டமே 1996 க்கு பின் தான் கொண்டு வந்தாங்க. அந்த சந்தா தொகையை 1991-1996 காலத்து செலவுக்கு கணக்கு காட்டினது தப்பு. இதை சொல்லவேண்டிய பவானி சிங் மவுனமா இருந்தாரு. அதனால் குன்ஹா அந்த சந்தா தொகையை வருமானமா கணக்கில் எடுத்துகிட்டாரு. இப்ப நேத்து அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் இதை தெளிவா வழக்கு காலத்துக்கு பிந்தைய வருமானம்னு ஆதாரத்தோட சொல்லிருக்கார்)

வருமான வரி துறைக்கு 1997 ஆம் வருஷம் (இந்த வழக்கு போட்டதுக்கு அப்புறமா) அவசரம் அவசரமா வருமான விவரம் தாக்கல் செஞ்சாங்க ஜெ. அதில் கூடுதலா வருமானம் வந்ததா கணக்கு காட்டி அதுக்கு வரியும் கட்டிட்டாங்க. அதை இப்ப கோர்ட்டில் சொல்லி வருமான வரித்துறையே வரியை ஏத்துகிச்சுன்னு வாதாடினாங்க. அப்பவும் பவானிசிங் அமைதியா தான் இருந்தாரு. வரி கட்டிட்டதாலேயே அந்த வருமானம் சரியானதுன்னு அர்த்தம் இல்லை. வருமானம் எப்படி வந்துச்சுன்னு அவங்க சொல்லி ஆகணும். 5 வருஷத்தில் வருமானமே இல்லைன்னு சொல்லி வருமான வரி தாக்கல் செய்யாம இருந்துட்டு வழக்கு போட்டதும் வருமானம் வந்துச்சுன்னு சொன்னா எப்படி வந்துச்சுன்னும் சொல்லணும். அதான் சட்டம். ஜெ. சொல்றதை ஏத்துக்கிட்டா, நாளைக்கு லஞ்சம் வாங்குற எல்லாருமே அதில் 10% (அ) 30% வருமான வரியை கட்டிட்டு தைரியமா பாக்கி பணத்தை உபயோகிக்கலாமே? அது லஞ்சத்தையும் ஊழலையும் சட்டப்பூர்வமாக்கிடும். அதனால் கோர்ட் ஜெ.வின் அந்த வாதத்தை  ஏத்துக்கலை.

32 கம்பெனிகள் திடீர்னு தொடங்கினாங்க. லேட்டர்பேடு கம்பெனியே தான். இந்த கம்பெனிகளுக்காக கிட்டத்தட்ட 54 வங்கி கணக்குகள். இந்த கணக்குகளுக்குள் பண பரிமாற்றம், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் போன்றவை. ஆனா இந்த கம்பெனிகள் எந்த தொழிலிலும் ஈடுபடலை. வருமானவரி துறை, கம்பெனிகள் துறை, விற்பனை வரி துறை, கலால் வரி துறை எதிலும் பதிவும் செயலை, வியாபாரமும் இல்லை. ஆனா பணம் மட்டும் லட்ச லட்சமா பரிமாறிட்டு இருக்கு.

அதாவது ஜெ.வுக்கு கொடுக்கவேண்டிய தொகையை எல்லோரும் இந்த வங்கிகளில் செலுத்துவாங்க. அதை மற்ற கணக்குகளுக்கு பிரிச்சு பிரிச்சு மாத்தி மாத்தி அது மூலமா சொத்துக்கள், வீடுகள், நிலங்கள் வாங்கிக்குவாங்க. கொடுக்கவேண்டிய தொகை என்பது டெண்டர், திட்டங்கள், திட்ட செலவீனங்கள் போன்றவற்றில் கிடைக்கும் பங்கு தொகை மற்றும் தொழிலதிபர்கள் சில காரியங்களுக்காக வழங்கும் ஊக்கத்தொகை’. இதனால் பாதிக்கப்பட்டது நாம தான். உதாரணமா தரமற்ற பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள் எல்லாம் கட்டப்பட்டதற்கு காரணம் திட்ட செலவில் ஒரு பகுதி இந்த கணக்குகளுக்கு செலுத்தவேண்டி இருந்ததால் தான்.

அவர்கள் வாங்கிய சொத்துக்களின் விற்பனை விலையை கணக்கில் எடுத்து தான் 66 கோடி. நிஜ மதிப்பை கோர்ட் கணக்கில் எடுக்கவே இல்லை. உதாரணமா அம்ருதாஞ்சன் ஓனரின் பங்களா (சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க் அருகில் உள்ளது), கங்கை அமரனின் நீலாங்கரை பங்களா, ஊட்டியில் கொடநாடு உள்ளிட்ட சில எஸ்டேட்டுகள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டது. உதாரணமா 2 கோடி மதிப்புள்ள வீட்டை 30 லட்சத்துக்கு வாங்கி இருந்தா அந்த 30 லட்சம் தான் கணக்கில் எடுத்து இருக்காங்க. அப்படி தான் அது 66 கோடி. (நிஜ மதிப்பான 2 கோடியை கணக்கிட்டிருந்தா தொகை ஜாஸ்தி ஆயிருக்கும். அந்த வீட்டின் இப்போதைய சந்தை மதிப்பான 7 கோடியை கணக்கிட்டா மொத்த தொகை எங்கேயோ போய் நிக்கும். ஆனா கோர்ட் விற்பனை விலையை மட்டும் தான் கணக்கில் எடுத்துருக்கு. அப்படியே அது 66 கோடி). இப்படி 2 கோடி வீட்டை 30 லட்சத்துக்கு மிரட்டி வாங்க ஒரு அடியாள் கூட்டமே வெச்சிருந்தாங்க. மீடியாக்களில் அவர்களை மன்னார்குடி மாஃபியா என அன்போடு அழைப்பார்கள். (பார்க்க : The many homes of Sasikala Natarajan )

இப்படி வருமானமே இல்லாத காலத்தில் பதவியை பயன்படுத்தி அரசு பணத்தை தொழிலதிபர்கள் கான்டிராக்டர்கள் மூலமா இவர்கள் பெயரில் உள்ள கம்பெனிகளில் செலுத்தி அந்த பணத்தை வைத்து அடிமாட்டு விலைக்கு சொத்துக்களை வாங்கி குவித்தது தான் மெயின் குற்றச்சாட்டு. இதை எதிர்த்தவர்களை மிரட்டி பழி வாங்கியது, வழக்கின் சாட்சிகளை மிரட்டி பிழற் சாட்சிகளாக மாற்றியது, வழக்கறிஞர்களையே மிரட்டியது என்பதை எல்லாம் கவனத்தில் எடுத்து தான் உச்ச நீதிமன்றம் வழக்கை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியது.

அதனால் ஜெ. குற்றமற்றவர்னு ஏதாச்சு நினைப்பு மிச்சம் மீதி இருந்தா அதை மொத்தமா மறந்துடுங்க. ஜெ. வே குற்ற தொகையை குறைக்க தான் வாதாடிட்டு இருக்காங்களே தவிர குற்றமே செய்யலைன்னு அல்லங்கறதை நினைவில் வெச்சுக்கவும். சுருக்கமா சில முக்கியமான விஷயங்கள் தான் கொடுத்திருக்கேன். அதுவே நீண்டிருச்சு. மற்ற விஷயங்களை எல்லாம் கேட்டா உங்களுக்கு தலை சுத்தும். ஆனா அதெல்லாம் குன்ஹா கொடுத்திருக்கும் 1136 பக்க தீர்ப்பில் விரிவா பதிவு பண்ணப்பட்டு இருக்கு. ஜெ. மீதான குற்றச்சாட்டு எப்படி உறுதியாச்சு, அதற்கான காரணங்கள் என்ன, எப்படி எல்லாம் அவர் முறைகேடு செய்திருக்கார்னெல்லாம் விலாவாரியா தெளிவா ஆதாரங்களோட தீர்ப்பில் பதிவு செஞ்சிருக்கார் குன்ஹா. வாய்ப்பு கிடைச்சா படிச்சு பாருங்க.

இனி அனேகமா அடுத்த வாரம் தீர்ப்பு வந்திரும். என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு அப்புறமா பேசலாம்.

*************************

30.04.2015 : பிற்சேர்க்கை:

நேற்றிரவு ஒரு நண்பர் கொடுத்த அப்டேட் படி, நீதிபதி குமாரசாமி அவர்கள், ஆச்சார்யா, அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களின் நகலை ஜெ. தரப்பு வக்கீல்களான செந்தில், நாகராஜன், கருப்பையா மற்றும் முத்துக்குமார் ஆகியோரிடம் வழங்கி விட்டதாகவும், பதில் கேட்டிருக்காரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும் அறிகிறேன். இது உங்கள் கவனத்துக்கு. நன்றி.

5 comments:

  1. Good summarization. Acharya returns is yet another twist in this 18+years episode. Let us see any other twists come before the climax :)

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. நல்ல அருமையான தொகுப்பு. தீர்ப்பு விரைவில் வந்தால், கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைவார், இந்த தீவிர பக்தர்களிடமிருந்து விடுதலை பெற்றோமென்று.

    ReplyDelete
  4. இது குறித்த

    சவுக்கின் மற்றுமொரு பதிவு!

    http://www.savukkuonline.com/11607

    ReplyDelete

Printfriendly