Tuesday, February 16, 2016

அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் – வரலாறு

மீபகாலமாக மீடியாவில் வந்துகொண்டிருக்கும் செய்தி திருப்பூரில் அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போன்றவை தான்.

பல்வேறு கட்சிகளும் இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுப்பதும், தமிழக அரசு இன்றைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூட இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருப்பதும், இந்த திட்டத்தின் தேர்தல் கால முக்கியத்துவத்தை நமக்கு சொல்கின்றன. 

அது என்ன திட்டம்?

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி நதி மேட்டுப்பாளையம் அன்னூர் வழியாக பவானியை அடைந்து காவிரியில் கலக்கிறது. நீலகிரி மலைவாசஸ்தலம் ஆகையால் நல்ல நீர் வளம். ஆண்டில் பல மாதங்கள் பவானியில் நீர் இருக்கும்.

மேல் பவானி அணையிலிருந்து இறங்கி வரும் பவானி நதி அத்திக்கடவு கடந்து பில்லூர் டேமுக்கு வருகிறது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் சிறுமுகை வழியாக பயணித்து சத்தியமங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து கோபிச்செட்டிபாளயம் வழியாக பவானி நகரில் காவிரியுடன் கலக்கிறது. இது தான் பவானியின் பயண குறிப்பு.

இன்னொரு புறம், கோவை கிழக்கு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக இருக்கின்றன. கோவை நகருக்கு கேரளாவிலிருந்து சிறுவாணி நதி மூலம் குடிநீர் சப்ளை இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே கோவைக்கு கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் தேவையாக இருந்தது.

திருப்பூரை பொறுத்தவரை நொய்யல் நதி இருந்தாலும் அது நம்ம கூவம் போல பாழ்பட்டு கிடக்கிறது (உபயம் சாய பட்டறைகளின் கழிவுகள்). இது இப்போதைய நிலை. ஆனாலும் நொய்யல் முன்பிருந்தே குடிநீர் ஆதாரத்துக்கான நதியாக இருக்கவில்லை. ஆக, திருப்பூர் பகுதிக்கும் நீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக ஒரு நீர் திட்டம் தேவையாக இருந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் ரசு 1957 ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதாவது நான் முன்பே சொன்ன பவானி நதியில் இருந்து ஒரு கால்வாய் வெட்டி அதை திருப்பூர் நோக்கி கொண்டு வருவது.

தெளிவாக சொல்வதானால், பில்லூர் அணையில் இருந்து பவானி சாகர் செல்லும் வழியில் தனியாக ஒரு கால்வாயை வெட்டி நீரை திருப்பி விட்டு நேராக அன்னூர் கொண்டு வருவது. அங்கிருந்து அந்த கால்வாயை ரெண்டாக பிரித்து ஒன்றை கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக  திருப்பூருக்கும் இன்னொன்றை புளியம்பட்டி, நம்பியூர் வழியாக பெருந்துறைக்கும் கொண்டு போவது.

Thanks: The HINDU


இதன் பலன்கள்??

133.4 கி.மீ பயணிக்கும் இந்த கால்வாய் நீரால் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

48 ஏரிகள், 213 குளங்களை இந்த கால்வாய் வழியாக வரும் பவானி நீர் நிறைக்கும்.

இதன் மூலம் 25000 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும்.

நன்றாக கவனிக்கவும்..

இந்த நீரை அப்படியே குடிநீருக்காக அனுப்ப போவது இல்லை. திட்டப்படி 20 நாட்களுக்கு தினசரி 750 கன அடி நீர் இந்த வழியாக அனுப்பப்படும். மொத்தம் 12 டி.எம்.சி தண்ணீர். இந்த நீர் அந்த வழியே பயணிப்பதாலும் சிறு குளங்களை நிரப்புவதாலும் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரச்செய்து அதன் மூலம் கிணற்று நீர் பாசனத்தை அதிகாரிக்கும். அதனால் தான் இந்த திட்டத்தை Athikadavu-Avinashi Ground Water Recharging Scheme என பெயரிட்டனர்.

1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த திரு.மாரப்பகவுண்டர் அவர்கள் தான், அன்றைய முதல்வர் திரு. காமராஜரிடம் அவினாசி திட்டத்தை வலியுறுத்தி எற்றுக்கொள்ள வைத்தவர். 1957 இல் வந்த ஐடியா மெல்ல மெல்ல விரிவாகி அதன் முதற்கட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்ததும் 1972 இல் அப்போதைய திமுக அரசால் கொள்கை ரீதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் எமெர்ஜென்சி அது இது என முன்னெடுக்க முடியாமல் முடங்கியது. பின்னர் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஒன்றும் நகரவேயில்லை.

1989 இல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் விட்ட இடத்திலிருந்து தொடங்க முயற்சித்தனர். ஆனால் 1991 இல் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சி ஜெ. தலைமையில் வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் முடங்கியது.

பின்னர், 1996-2001 திமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் முதல் காரணியான கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்தது. பவானி அத்திக்கடவு திட்டம் என்கிற அந்த திட்டம் தான் இன்றும் கோவைக்கான குடிநீர் ஆதாரம். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்றிருந்த கோவை குடிநீர் சப்ளை இப்போது வாரா வாரம் என ஆனதற்கு இந்த அத்திக்கடவு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததே காரணம்.

2001-2006 அதிமுக ஆட்சியில் மீண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.

திரும்ப 2006-2011 திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான அனுமதி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சுற்று சூழல் துறையின் அனுமதியும், நீர் வள ஆதார அமைச்சகத்தின் அனுமதியும் கேட்கப்பட்டது. திட்டத்தின் அனைத்து நடவடிக்கையும் அந்த அனுமதிக்காக காத்திருக்க தொடங்கியது.

அதே வேளையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக கோவையின் கூடுதல் குடிநீர் தேவையை ஈடுகட்டும் திட்டத்துக்கு என அத்திக்கடவு பேஸ் II திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பணி முழுமையாக முடிவடைந்து சரவணம்பட்டி அருகில் பிரதான சென்டிரல் வாட்டர் டேங்க்  கட்டப்பட்டு, கோவை நகர் முழுமையும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு திட்டம் முழு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

கோவை மக்களுக்கு குடிநீருக்கு இருந்த கஷ்டத்தை உணர்ந்த கோவைக்காரரான அப்போதைய அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி “ஏற்கனவே அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிவடைந்துவிட்டதால் விரைவில் திறக்கப்படும்” என கேஷுவலாக பேட்டி கொடுத்து வைக்க, என்ன காரணத்தாலோ இரண்டொரு நாளில் அவரது பதவி பறி போனது. 


மேலும், கோவை நகரின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த அத்திக்கடவு குடிநீர் விநியோகம் முடக்கி வைக்கப்பட்டது. அதை எதிர்த்து ஆங்காங்கே பொதுமக்கள் ரோட்டில் இறங்கி அதிமுக அரசுக்கு எதிராக போராட தொடங்கினார்கள். 

அதோடு இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இனி வரும் தேர்தலில் திமுக வென்றால் தான் அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்பாட்டுக்கு வந்து கோவைக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைக்கும் என்கிற நிலை தான் இப்போது. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட அந்த திட்டம் மொத்தமாக முடங்கி வீணாக கிடக்கிறது.

இதற்கிடையில், மத்திய அரசுக்கு அனுப்பப்பட கருத்துருவில் சில திருத்தங்கள் விளக்கங்கள் கேட்டு 2012 இல் தமிழக அரசுக்கு கடிதம் வந்திருந்தது. அதற்கான திருத்திய கருத்துருவை இன்று வரை மாண்புமிகு அம்மா தலைமையிலான தமிழக அரசு அனுப்பாததால் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை இந்த திட்டத்துக்காக நிதி உதவி அளிக்க தயாராக இருப்பதாக 2006-2011 திமுக ஆட்சியிலேயே அறிவித்திருப்பதால், ரூ. 1862 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதில் எந்த சிக்கலும் இல்லை.

சுமார் 1400 ஏக்கர் நிலமும், 20 ஏக்கர் வனப்பகுதியும் கையகப்படுத்தவேண்டி இருந்தாலும், அதற்கான எந்த முயற்சியையும் இப்போதைய தமிழக அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த திரு. ஆர். ஒத்திசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போட்டு, திருத்திய கருத்துருவை தமிழக அரசு அனுப்ப வேண்டும் எனவும், திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில், நீதிபதிகள் திரு எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தமிழக பொதுப்பணி துறைக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி போட்ட உத்தரவில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கேட்டு இருந்தார்கள். அதிலும் எந்த முன்னேற்றமும் இன்று வரை இல்லை.

இந்த நிலையில் தான் திட்டத்தின் மூல கருவான அவிநாசிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்க வேண்டும் என திருப்பூரில் போராட்டம் தொடங்கி இருக்கிறது. (எப்படியும் திமுக வந்து கோவைக்கு குடிநீர் தர திட்டத்தை தொடங்குவார்கள், அதோடு இதையும் கேட்டு பெறலாம் என நினைத்தார்களோ என்னவோ, தேர்தல் சமயமாக பார்த்து போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்)

போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த தமிழக அரசு, இன்றைய தினம், திட்டம் தொடங்க ஆவன செய்யப்படும் என்றொரு ஒற்றை வரி வாக்குறுதியை தந்ததுமே, அவர்கள் இந்த திட்டத்தை முடக்கியதை எல்லாம் மறந்து, அம்மா புகழ் பாடி பாராட்டி கொண்டாடும் இணைய மனிதர்கள் தான் ஆச்சரிய படுத்துகிறார்கள்’.

இது வழக்கமானது தானே?

Reference:




6 comments:

  1. வாயாலே வடை சுடுவது என்பது இது தானோ!

    ReplyDelete
  2. அறியத் தந்தீர்கள்... நல்ல கட்டுரை...

    ReplyDelete
  3. Superb....I had zero knowledge bout this before reading...thank u so much

    ReplyDelete
  4. இதுநாள் வரை அத்திக்கடவு திட்டம் என்னவென்றால் தெரியாமல் இருந்தேன் உங்களுடைய விளக்கம் என் தேவையை பூர்த்தி செய்தது மிக்க நன்றி

    ReplyDelete
  5. நல்லா திமுகவுக்கு சொம்பு

    ReplyDelete
    Replies
    1. இது பொய் என்றால் மறுப்பு வெளியிடுங்கள்.

      Delete

Printfriendly