Wednesday, November 9, 2016

செல்லா காசுகள்

ன்னைக்கு காலைல முழிச்சதே ஒரு ஆச்சரிய அதிர்ச்சியான சந்தோஷ தகவல் மீது தான். அரை தூக்கத்தில் மொபைலை எடுத்து டிவிட்டரை ஓப்பன் செஞ்சா நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாதுன்னு பிரதமர் அறிவீச்சிருக்கிறதாவும் அதை எப்படி எங்கே எப்போது வரை மாற்றலாம்னும் விரிவா நிறைய தகவல்கள். போதாக்குறைக்கு வாட்சப் பூரா அதே மெசேஜ். ஒரு புதிய இந்தியா உதயம் என தலைவர் ரஜினி போட்ட டிவீட் வேற அடிக்கடி டைம்லைனுக்கு வந்து போச்சு. ஓவர் நைட்ல என்ன என்னமோ நடந்திருக்கு. நான் என்னடான்னா நேத்து சாயந்தரத்துல இருந்து எந்த கவலையும் இல்லாம ஊர் சுத்திட்டு இருந்திருக்கேன்.



சரி ஆனது ஆச்சு.. இனி இதை பத்தி விரிவா அலசலாமா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் பிரபலமடைந்த ஐடியா தான் இது. 500, 1000 நோட்டெல்லாம் செல்லாதுன்னு திடீர்னு அறிவிச்சா கருப்பு பணமா கணக்கில் காட்டாம பதுக்கி வெச்சவனுக்கெல்லாம் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும். நேர் வழியில் சம்பாதிச்சு வெச்சிருக்கறவனெல்லாம் அதை பேங்கில் கொண்டு போய் கட்டிடுவான். இது தான் ஐடியா. சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் படத்தில் கூட இந்த ஐடியாவை காமெடியா சொல்லிருப்பாங்க. இப்போ அது நிதர்சனமாகி இருக்கு.

என்னை பொறுத்தவரை இது மிக மிக அரிதிலும் அரிதான அதிரடி முடிவு. இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்தும் அவர்களிடத்தில் இந்த ஐடியாவை பலரும் சொல்லி இருந்தும் யாரும் எடுக்க துணியாத முடிவு இது. இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடியை எவ்வளவு வேணும்னாலும் கொண்டாடலாம். ஆனா இந்த முடிவுக்கு பின்னாடி இன்னும் சில கருப்பான விஷயங்களும் இருக்கு.

அதாவது, 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போலி ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் புழக்கத்துக்கு விடப்பட்டு இருக்குன்னும், அதற்கு இந்தியாவை பொருளாதார ரீதியா நசுக்க நினைக்கும் பாகிஸ்தானின் சதியும் காரணம்னும் சில தகவல்கள் பல காலமாகவே சுத்திட்டு இருக்கு. நிதி அமைச்சகம் ஏனோ இது பற்றி பெரிசா எந்த அக்கறையும் காட்டிக்கிடலை. ஏகனாமிக் இண்டெலிஜென்ஸ் தகவல்களின் படி 500, 1000 நோட்டுக்கள் ரிசர்வ் பேங்க் சைடிலிருந்து புழக்கத்தில் விட்ட அளவை விட அதிகமா (கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு) மக்கள் கிட்டே புழக்கத்தில் இருக்கு. சில மாசங்களுக்கு முன் குறிப்பிட்ட சீரியல் எண் உள்ள 500 ரூ நோட்டெல்லாம் செல்லாதுன்னு வங்கிகளில் ஒரு அறிவிப்பு வெச்சிருந்தாங்க. 500 ரூ நோட்டுன்னாலே எல்லாருமே சந்தேகமா பார்க்கிற அளவுக்கு நிலமை இருந்துச்சு. ஆனால் அதை எல்லாம் கடந்து ஓவரா கள்ள நோட்டு புழக்கத்துக்கு வர்ற வரைக்கும் அரசாங்கம் மெத்தனமா இருந்திருக்கு. நிலைமை கைமீறி போனபின், இந்திய பொருளாதாரத்துக்கே வேட்டு விழும்ன்ற நிலை வந்தபின் பிரதமரே நேரடியா தலையிட்டு இந்த அதிரடி முடிவு எடுத்திருக்கார். இந்த முடிவின் மூலம் இதுவரை இருந்த கையாலாகத்தனமும் மெத்தனமும் நிர்வாகத்திறமையின்மையும் மறைக்கப்பட்டு வெற்றி வீரரா வலம் வருகிறார். என்ன தான் காரண காரியங்களை சொன்னாலும் இது ஒரு அசாத்தியமான துணிச்சலான கம்பீரமான முடிவு என்பதை மறுக்க முடியாது. மோடி அந்த வகையில் பாராட்டுக்குரியவர் தான்.

சரி. இந்த முடிவினால் என்னென்ன மாற்றங்கள் வரும்?

கருப்புப்பணம் ஊழல் லஞ்சம் எல்லாம் ஒழிஞ்சிருமான்னா நிச்சயமா இல்லை. கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் முடிவு தான் அரசின் குறிக்கோள். ஆனா அதன் பிற பலா பலன்களா (ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும்) கருப்புப்பணம் ஓரளவுக்கு வெளியே வரும்.

இன்னைக்கு காலையில் கூட செக்போஸ்டில் ஒரு டிரக் டிரைவர் கடை கடையா ஏறி 1000 ரூ நோட்டுகளுக்கு சில்லறை கேட்டுட்டு இருந்தாரு. செக்போஸ்டில் கொடுக்கவேண்டிய லஞ்சத்தை இப்போ 100 ரூ நோட்டா மாத்தி தர சொல்லி இருக்காங்களாம். ஆக மொத்தம் லஞ்சமோ ஊழலோ ஒழியாது. மோடு ஆஃப் ஆபரேஷன் வேணும்னா மாறும்.


நிச்சயமா பெரிய தொழிலதிபர்கள் மிக பெரிய அரசியல்வாதிகள் இதில் சிக்க மாட்டார்கள். ஏன்னா யாரும் அவ்வளவு தொகையை கேஷா பதுக்கி வைக்க மாட்டாங்க. மிடில் கிளாஸ், சம்பளதாரர்கள், தினசரி செலவு செய்வோர், மளிகை கடை, நகைக்கடை, அடமான கடை நடத்துவோர், கந்துவட்டி / சீட்டு / வட்டிக்கு விடுவோர், குறு சிறு தொழில் முனைவோர், ரியல் எஸ்டேட், வீடு மனை விற்பனை செய்வோர் / வாங்குவோர், திருமணம் / பத்திரபதிவு மாதிரியான காரியங்களுக்காக பணம் சேர்த்து வைத்திருப்போர், சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தினசரி கூலிக்கு ஆட்கள் பிடித்து தரும் ஏஜெண்டுகள் போன்றோர், லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்திருக்கும் (கீழ் நிலை / இடை நிலை) அரசு ஊழியர்கள், காவலர்கள், வட்டார போக்குவரத்து / வணிகவரி ஊழியர்கள், லோக்கல் அரசியல்வாதிகள், அரசு கான்டிராக்டர்கள்..  இந்த மாதிரி நபர்களிடம் தான் எப்போதுமே அதிக அளவில் 500 1000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும்.

இப்போது நேற்றிரவில் இருந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த ரெண்டொரு நாட்களுக்கு மேலே சொன்னவர்கள் பாடு தான் திண்டாட்டம். அதற்காக அவர்கள் எல்லோருமே தவறான முறையில் பணம் சேர்த்ததாக அர்த்தம் அல்ல. தினசரி பெரிய அளவில் செலவு செய்யக்கூடியவர்கள் அவர்கள். அதில் பலர் நேர் வழியிலும் சம்பாதித்து இருக்கலாம். ஆனா திடீர் என இரண்டு நாட்களுக்கு பணம் செல்லாது, வங்கியும் இல்லை, மாற்றவும் முடியாது என்றால் எல்லா வேலைகளும் நின்று போய் விடும். திருமணம் போன்றவை நின்றால் வாழ்க்கையே போன மாதிரி தானே? அந்த மாதிரியான அதீத பாதிப்புக்களை பற்றி எல்லாம் அரசு சிந்தித்ததாக தெரியவில்லை.

கையில் இருக்கும் 500 1000 நேர் வழியில் சம்பாதித்தது என்றாலும் கூட அதை மாற்ற இரண்டு நாள் காத்திருக்கணும். அதுவரை டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். ஆனால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தணும். மேலும் பேங்க் அக்கவுண்டில் பேலன்சும் இருக்கணும். நாம் ஏதோ ஒரு செலவுக்காக மொத்தமாக துடைத்து எடுத்து வீட்டில் வெச்சிருப்போம். அவ்வளவு தான். பணம் இருந்தும் உபயோகப்படுத்த முடியாத நிலை தான்.

அரசு 500 1000 செல்லாது என முடிவெடுப்பதற்கு முன்பாக அதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி சிந்திச்சிருக்கணும். கார்டு மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லைன்னு அறிவிச்சிருக்கணும். எல்லா தனி நபருக்கும் வங்கி கணக்கு இருக்கான்னு யோசிச்சிருக்கணும். எதையும் செயலை.

நேர்வழியில் சம்பாதிச்சவங்க எல்லாம் ரெண்டு நாள் கழிச்சு அவங்கவங்க கிட்டே இருக்கிற 500 1000 நோட்டுக்களை பேங்கில் அவங்க அக்கவுண்டில் கட்டிட்டு அப்புறமா ஏ.டி.எம் மூலமா எடுத்துக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லை. அதிக அளவில் பணம் கையிருப்பில் இருந்தா அது எதனாலன்னு ஒரு விளக்கம் எழுதி கொடுக்கணும்னு அரசு சொல்லி இருக்கு. இதெல்லாம் ஓகே தான். பெரிய பிரச்சனை இல்லை.

நேர் வழி அல்லாமல் கள்ளத்தனமாக சம்பாதித்த பணம் பதுக்கி வெச்சிருக்கறவங்க தான் சிக்குவாங்க. பதுக்கி வெச்சிருக்கிற பணத்தை பேங்கில் கட்டவும் முடியாம (கணக்கும் காரணமும் பணம் வந்த வழியும் கேப்பாங்களே?) செலவு செய்யவும் முடியாம (யாரும் வாங்க மாட்டாங்க) பதுக்கி வைக்கவும் முடியாம (அதான் செல்லாதே?) மொத்தத்தில் ஒரு பண்டில் பேப்பரை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். 

ஜூவல்லரி, மளிகைக்கடை, நகை அடமான கடை போன்றோர் தான் அதிக அளவில் கணக்கில் காட்டாத பணத்தை எப்போதுமே கைவசம் வைத்திருப்பார்கள்.

ரியல் எஸ்டேட், கன்ஷ்டிரக்ஷன் போன்ற துறையினரும் பணத்தை அதிக அளவில் இருப்பு வெச்சிருப்பாங்க ஆனா அதை கணக்கில் காட்டிட முடியும். அதற்கான சோர்ஸ் தெளிவா இருக்கும்.

பார்ப்போம் இதுவரை எத்தனை பேரு அதிர்ச்சியில் என்னென்ன ஆகியிருக்காங்கன்னு.

மத்தபடி கட்டுக்கட்டா பணத்தை சாக்கு மூட்டையில் கட்டி தோட்டத்தில் பதுக்கி வெக்கிற அளவுக்கு கருப்புப்பணம் வெச்சிருக்கிற ஆட்களுக்கு தான் கவலை அதிகமா இருக்கும். நம்மை போல அன்னாடம் காய்ச்சிகளுக்கு அடுத்த ரெண்டு நாள் எப்படி ஒட்டுறதுன்ற கவலை மட்டும் தான் இருக்கும்.

இந்த திட்டத்துக்கான அஸ்திவார பணிகள் 2011 ஆம் வருஷமே தொடங்கிச்சு. ஜீரோ பேலன்ஸ் பேங்க் அக்கவுண்ட் அறிமுகம் செய்து (நோ பிரில் அக்கவுண்ட்) எல்லோரையும் வங்கி கணக்கு எடுக்க வெச்சு, எல்லோருக்கும் டெபிட் கார்டு கொடுத்து நாடு முழுதும் ஏ டி எம் எண்ணிக்கையை அதிகரிச்சு, அரசு துறைகளில் எலக்டிரானிக் பேமெண்ட் சிஸ்டத்தை உருவாக்கி எல்லாருமே 100% உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி முடிக்க இத்தனை காலம் ஆகி இருக்கு.

இதன் பின் விளைவுகள் என்ன என்ன ஆகும்ன்றது, எத்தனை பேர் அளவுக்கு அதிகமா கருப்பு பணம் பதுக்கி வெச்சு இப்போ திவால் ஆகி இருக்காங்கன்ற தகவல்கள் வர தொடங்கினப்புறம் தான் தெளிவா அலச முடியும். லஞ்சமா வாங்கி வீட்டில் பதுக்கி வெச்சிருக்கிற அரசு ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். மத்த பெரும் கருப்புபணங்கள் எல்லாம் ஆஸ்தியாவோ சொத்தாவோ வீடாவோ எப்பவோ வாங்கிருப்பாங்க. யாரும் கேஷா பதுக்கி வெச்சிருக்க மாட்டாங்க. ஆக பாதிப்பு என்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தில் தவறு செய்தவர்களுக்கு மட்டும் தான்.

கருப்பு பணம் இனி மேல் வராமல் இருக்கவும் லஞ்சம் ஊழல் சுத்தமா ஒழியவும் ஒரே வழி தான் இருக்கு.

எல்லா பரிமார்ரங்களும் வங்கி மூலமா இருக்கணும். 10000 ரூபாய்க்கு மேல் யார் கிட்டேயும் கேஷா இருக்கக்கூடாது.


இந்த ரெண்டு கட்டுபாடு இருந்தாலே 90% கருப்புபணம் வெளியே வந்திரும். பார்ப்போம் அரசு என்ன செய்யபோகுதுன்னு. 

*********

தொடர்புடைய பதிவுகள்:
  1. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 1
  2. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 2 

1 comment:

Printfriendly